பள்ளி சீருடையுடன் மாணவர் இருவர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
பள்ளி சீருடையுடன் மாணவர் இருவர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
UPDATED : அக் 26, 2024 12:00 AM
ADDED : அக் 26, 2024 12:41 PM

கள்ளக்குறிச்சி :
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் இருவர் சீருடையுடன் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சி அடுத்த பெருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் மோகன்ராஜ், 13; மகள் கீர்த்திகா,12; இருவரும் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முறையே 8 மற்றும் 7ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இவர்கள் நேற்று மதியம் பள்ளி சீருடை மற்றும் புத்தகப்பையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு தங்கள் பாட்டியுடன் வந்து, அலுவலகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களை, கலெக்டர் பிரசாந்த் அழைத்து விசாரித்தார். அப்போது பள்ளி ஆசிரியர்கள் தங்களை, பள்ளி கழிவறைகள் மற்றும் வளாகத்தை சுத்தம் செய்ய வைத்தது தொடர்பாக எங்கள் தந்தை மூலம் புகார் தெரிவித்தோம்.
இதனால் வன்மம் கொண்டு எங்களுக்கு பாடம் எடுக்கக்கூடாது, சக மாணவர்கள் எங்களுடன் பேசக்கூடாது என தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் கூறி வருகிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறியதை ஏற்று இருவரும் அங்கிருந்து சென்றனர்.