படித்தது இருவர்; ஒருவர் தோல்வி ஆதிதிராவிடர் நலப்பள்ளி அவலம்
படித்தது இருவர்; ஒருவர் தோல்வி ஆதிதிராவிடர் நலப்பள்ளி அவலம்
UPDATED : மே 19, 2026 03:48 PM
ADDED : மே 19, 2026 03:49 PM
சென்னை:
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும், 98 மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 2 பொதுத் தேர்வில், 21 பள்ளிகள் மட்டுமே, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. ஒரு பள்ளியில், கணித, உயிரியல் பாடப்பிரிவில், இரு மாணவர்கள் படித்தனர். அதில் ஒருவர் தோல்வியை தழுவியுள்ளார்.
தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், 98 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட, 1,138 பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 60,000க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப்பிரிவு மாணவர்களின், கற்றல் திறனை மேம்படுத்த, ஒருங்கிணைந்த விடுதிகள், திறன் கற்றல் மையம், 100 சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவித்தொகை என, ஏராளமான திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது.
எனினும், இப்பள்ளிகளில் நிலவும் பாதுகாப்பு குறைபாடு, ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், மாணவர்கள் எண்ணிக்கை, ஆண்டுதோறும் சரிந்து வருகிறது. இதை சரிசெய்ய, துறை சார்பில், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சமீபத்தில் வெளியான, பிளஸ் 2 தேர்வு முடிவில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் 98 மேல்நிலைப் பள்ளிகளில், 21 பள்ளிகள் மட்டுமே, 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன. குறிப்பாக, 20க்கும் குறைவாக மாணவர்கள் படிக்கும் பள்ளி, இருவர் மட்டும் படிக்கும் பாடப்பிரிவு என, குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளில், தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், வாலையத்து வயல், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், பொதுத் தேர்வு எழுதிய 16 மாணவர்களில், 13 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியில், கணிதம் - உயிரியல் பாடப்பிரிவில், படித்த இரண்டு மாணவர்களில், ஒருவர் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.
இதே போல், 77 பள்ளிகளிலும் நடந்திருப்பது, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களிடம், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
