கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு கோல்டன் விசா வழங்கும் யு.ஏ.இ.,
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு கோல்டன் விசா வழங்கும் யு.ஏ.இ.,
UPDATED : ஜன 23, 2025 12:00 AM
ADDED : ஜன 23, 2025 11:48 AM
அபுதாபி:
டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு கோல்டன் விசா திட்டம் வழங்கும் நடைமுறையை, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில், வெளிநாட்டினரை கவர பல்வேறு திட்டங்களை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வகையில், திரை பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் உள்ளிட்டோருக்கு அந்நாடு கோல்டன் விசா வழங்கி வருகிறது.
இதன்படி, டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும் கோல்டன் விசா திட்டத்தை, அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது.
சர்வதேச அளவில் டிஜிட்டல் உலகில் கன்டென்ட் கிரியேட்டர்கள் சாதனை படைக்க ஏதுவாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு சார்பில் கோல்டன் விசா திட்டம் கடந்த 13ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு, 337 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோல்டன் விசா பெறுவதன் வாயிலாக, பணியாற்றுவதற்கான சான்று உட்பட எவ்வித ஆவணங்களும் இன்றி, 10 ஆண்டுகள் வரை அந்நாட்டில் தங்க முடியும். அதன்பின், அந்த விசாவை புதுப்பித்துக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, முழு வரி விலக்குடன், மேம்பட்ட மருத்துவ வசதிகளையும் பெற முடியும்.
இந்த விசா பெற குறைந்தபட்ச வயது 25 ஆக இருக்க வேண்டும் எனவும், பாஸ்போர்ட், முந்தைய பணி அனுபவங்கள் தொடர்பான சான்றுகள் உள்ளிட்டவையும் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்களாக தனித்துவ சாதனைகள் படைத்திருப்பது அவசியம் எனவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு குறிப்பிட்டுள்ளது.
ஆன்லைன் ஊடகங்களான, பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யுடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்களில் சொந்தமாக உள்ளடக்கங்களை தயாரித்து பதிவேற்றுபவர்கள், டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.