விளையாட்டு பல்கலை துணைவேந்தர் தேடல் குழுவில் யு.ஜி.சி., பிரதிநிதி: கவர்னர் வலியுறுத்தல்
விளையாட்டு பல்கலை துணைவேந்தர் தேடல் குழுவில் யு.ஜி.சி., பிரதிநிதி: கவர்னர் வலியுறுத்தல்
UPDATED : மார் 12, 2025 12:00 AM
ADDED : மார் 12, 2025 09:34 AM

சென்னை:
விளையாட்டு பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடல் குழுவை ரத்து செய்து புதிய குழுவை நியமிக்க வேண்டும் என, தமிழக அரசை கவர்னர் ரவி அறிவுறுத்தி உள்ளார்.
கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கை:
மாநில பல்கலைகளின் வேந்தர் என்ற முறையில், தமிழக கவர்னர், தமிழக உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கு, புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக, தேடுதல் குழுவை நியமித்துள்ளார்.
உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை விதிமுறைகள், பல்கலை மானிய குழு விதிமுறைகளை பின்பற்றி இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கவர்னர், தமிழக அரசு, பல்கலை செனட், யு.ஜி.சி., சார்பில் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு அமைத்தது குறித்த அறிவிப்பை வெளியிடும்படி, தமிழக அரசுக்கு பல்கலை வேந்தர் என்ற முறையில், கவர்னர் அறிவுறுத்தினார். ஆனால், தமிழக அரசு ஜன., 28ல், யு.ஜி.சி., பிரதிநிதி இல்லாத தேடல் குழுவை நியமித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு, யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு மாறாக, வேந்தர் நியமித்த தேடுதல் குழுவில் இருந்து யு.ஜி.சி., பிரதிநிதி நீக்கப்பட்டுள்ளார்.
எனவே, தமிழக அரசு அரசாணையை திரும்ப பெற்று, யு.ஜி.சி., பிரதிநிதியை சேர்த்து, கவர்னர் நியமித்தபடி தேடல் குழு அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தொடரும் மோதல்
தமிழக பல்கலைகளில் துணைவேந்தரை தேர்வு செய்ய, யு.ஜி.சி., பிரதிநிதியுடன், கவர்னர் தேடல் குழு அமைப்பதும், தமிழக அரசு யு.ஜி.சி., பிரதிநிதியை நீக்கி, தேடுதல் குழுவை அறிவிப்பதும் தொடர் கதையாகி உள்ளது. தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான மோதல் காரணமாக, சென்னை பல்கலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, கோவை பாரதியார் பல்கலை ஆகியவற்றுக்கு, புதிய துணைவேந்தர் நியமிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. அந்த வரிசையில், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலையும் இணைந்துள்ளன. துணைவேந்தர் இல்லாததால், பல்கலையில் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.