UPDATED : மே 30, 2024 12:00 AM
ADDED : மே 30, 2024 10:36 AM
ஐக்கிய நாடுகள்:
காங்கோவில் ஐ.நா.,வின் அமைதிப்படையில் பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த ராணுவ மேஜர் ராதிகா சென்னுக்கு, இந்த ஆண்டிற்கான ஐ.நா.,வின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை, ஐ.நா., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெசிடம் மே 30ம் தேதி அவர் பெற்றுக் கொள்கிறார்.
ராதிகா சென் ஏற்படுத்திய தாக்கம்
காங்கோவில் ஐ.நா., சார்பில் இந்திய அமைதிப்படையின் கமாண்டராக 2023 மார்ச் முதல் ஏப்ரல் 2024 வரை, ராதிகா சென் செயல்பட்டார். அங்கு, நிலவும் மோதலால் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் ராதிகா சென் பேசினார். அவரின் பணிவு, இரக்கம், அர்ப்பணிப்பு ஆகியன பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மே 30ல்
மே 30 அன்று ஐ.நா.,வின் அமைதிப்படை வீரர்கள் சர்வதேச நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், ராதிகா சென்னின் பணியை பாராட்டி, 2023ம் ஆண்டிற்கான ஐநா.,வின் ராணுவபாலின வழக்கறிஞர் விருதை ஐ.நா., அன்டோனியோ குட்டரெஸ் வழங்க உள்ளார்.
யார் ராதிகா சென்
ராதிகா சென், ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் 1993ம் ஆண்டு பிறந்தவர். பயோடெக் பொறியியல் படிப்பு படித்த இவர், மும்பை ஐஐடியில் அந்த பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அங்கு படிக்கும் போது தான் ராணுவத்தில் இணையும் ஆர்வம் ஏற்பட்டது. இதனையடுத்து 2016ல் ராணுவத்தில் இணைந்தார்.
2வது இந்தியர்
ஐ.நா.,வின் இந்த விருதை பெறும் இரண்டாவது இந்தியர் ராதிகா சென் ஆவார். இதற்கு முன்னர், 2019ம் ஆண்டு இந்திய ராணுவ மேஜர் சுமன் கவானி இந்த விருதைப் பெற்றுள்ளார்.
பெருமை
விருது தொடர்பாக ராதிகா சென் கூறியதாவது:
இந்த விருது சிறப்பானது. காங்கோவில் சவாலான சூழ்நிலையில் அமைதிப்படை பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் பணிக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும். சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
பாராட்டு
ராதிகா சென்னை பாராட்டி ஐ.நா., பொதுச்செயலாளர் ஆன்டோனியா குட்டரெஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ராதிகா சென் உண்மையான தலைவர் மற்றும் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். அவரது சேவையால் ஐ.நா.,விற்கு கிடைத்த பெரிய கவுரவம் ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.