வசதிகளில்லாத ஊர்ப்புற நுாலகங்களை மேம்படுத்தணும்! வாசிப்பை நேசிக்கும் மக்களுக்கு சிக்கல்
வசதிகளில்லாத ஊர்ப்புற நுாலகங்களை மேம்படுத்தணும்! வாசிப்பை நேசிக்கும் மக்களுக்கு சிக்கல்
UPDATED : அக் 12, 2026 07:53 PM
ADDED : அக் 12, 2026 07:55 PM
உடுமலை:
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள ஊர்ப்புற நுாலகங்கள் நீண்ட காலமாக தரம் உயர்த்தப்படவில்லை; கிளை நுாலகங்களிலும், குறிப்புதவிக்கு தனியாக அறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழுவுக்கு தொடர் மனு அனுப்பி மக்கள் காத்திருக்கின்றனர்.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழுவின் கீழ், 11 கிளை நுாலகங்களும், 24 ஊர்ப்புற நுாலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
இதில், அதிக மக்கள் தொகை உள்ள கிராமங்களில் செயல்படும் ஊர்ப்புற நுாலகங்கள், நீண்ட காலமாக தரம் உயர்த்தப்படாமல் உள்ளன. குறிப்பாக, செல்லப்பம்பாளையம், சின்னவீரம்பட்டி, தேவனுார்புதுார், மடத்துக்குளம் தாலுகாவில், சாமராயப்பட்டி, பாப்பான்குளம், காரத்தொழுவு ஆகிய ஊர்ப்புற நுாலகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஆனால், இந்நுாலகங்கள், காலை, 9:00 மணி முதல், 12:00 மணி வரையும், மாலை, 04:00 மணி முதல், 06:30 மணி வரை மட்டுமே செயல்படும்.
நுாலகத்தை அனைத்து நேரங்களிலும் பயன்படுத்த முடியாத நிலையால், மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் பாதிக்கின்றனர். இந்த நுாலகங்களை கிளை நுாலகமாக தரம் உயர்த்தினால், நுாலகம் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்படும்; கூடுதல் புத்தகங்கள் ஒதுக்கீடு உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும்.
இதில், பெரும்பாலான ஊர்ப்புற நுாலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்கினாலும், தரம் உயர்த்த திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவில்லை.
திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டப்பிறகு, உடுமலை கிளை நுாலகம் - 1 மற்றும் மடத்துக்குளம் கிளை நுாலகங்கள் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டன. பிற நுாலகங்களின் பிரச்னைகள் கண்டுகொள்ளப்படவில்லை.
கட்டட வசதி இல்லை
தளி, ஜல்லிபட்டி, வாளவாடி, பூளவாடி ஆகிய கிளை நுாலகங்கள் முழு நேர நுாலகமாக தரம் உயர்த்தப்பட்டும், போதிய கட்டட வசதி இல்லை.
பள்ளி விடுமுறை நாட்களில், நுாலகத்துக்கு ஆர்வமாக வரும் குழந்தைகளுக்காக, தனியாக வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் கண்டுகொள்ளப்படவில்லை.
வாளவாடி, ராவணாபுரம், போடிபட்டி ஆகிய நுாலகங்களில் கூடுதல் கட்டடம் கட்டப்பட வேண்டும். பள்ளி மாணவ, மாணவர்களிடையே வாசிப்புத்திறனை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
ஆனால், ஆர்வம் இருந்தும் வசதிகளில்லாத நுாலகங்களால் இத்திட்டங்களில் பின்னடைவு ஏற்படுகிறது. எனவே, அதிக வாசகர்கள் வருகை இருக்கும் ஊர்ப்புற நுாலகங்களை, கிளை நுாலகமாக தரம் உயர்த்த வேண்டும்.
கிளை நுாலகங்களில், குறிப்புதவி பிரிவு, இணையதள வசதி, கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
ஆர்வமுள்ள கிராமங்களில் புதிதாக ஊர்ப்புற நுாலகங்கள் துவக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை பகுதி மக்கள், திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழுவுக்கும், தமிழக அரசுக்கும் தொடர்ந்து மனு அனுப்பி காத்திருக்கின்றனர்.
