மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!
UPDATED : ஜூலை 26, 2026 10:36 AM
ADDED : ஜூலை 26, 2026 10:40 AM

'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால், நாடு முழுதும் போராட்டம் நடந்த நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.
மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு வினாத்தாள் இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் கசிந்ததால், மாணவர்கள், பெற்றோர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். 'நீட்' மறுதேர்வு நடத்தப்பட்டு சமீபத்தில் முடிவுகளும் வெளியிடப்பட்டன.
எனினும், 'நீட்' வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; வருங்காலங்களில் வினாத்தாள் கசிவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.
ஒரு கட்டத்தில், இந்த விவகாரத்தை கையில் எடுத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அபிஜித் தீப்கே, மாணவர்களின் எதிர்காலத்திற்காக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார்.
அமெரிக்காவில் பணியாற்றி வந்த அபிஜித் தீப்கே, இதற்காக நாடு திரும்பி கடந்த ஜூன் 20ம் தேதி டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கினார்.
லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, 26 நாட்களாக ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்தார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததால், போலீசார் போராட்டப் பந்தலில் இருந்து அவரை குண்டுகட்டாக துாக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதன் பின், கடந்த 20ம் தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரும், மாணவர்களும் ஒன்று திரண்டு பார்லி.,யை முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்த நிலையில், போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். பதிலுக்கு போலீசாரும் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
இதனால் பார்லி., முற்றுகை போராட்டம் வன்முறையில் முடிந்தது. மறுநாள், மாணவர்கள் மீதான தடியடி மற்றும் போலீசாரின் அடக்குமுறையை கண்டித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் குரல் எழுப்பினர்.
இதனால், இந்த விவகாரம் நாடு முழுதும் விஸ்வரூபம் எடுத்தது. போராட்டத்தின் தொடக்கத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் வலியுறுத்தினர்.
பின்னர், வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு, 1 கோடி ரூபாய் நிவாரண நிதி, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதியக் கூடாது என நிபந்தனைகள் விதித்தனர்.
நாளுக்கு நாள், போராட்டம் வலுவாக பரவியதால், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருடன் பா.ஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் இருவரும் பேச்சு நடத்தினர்.
அப்போதும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்; அதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், மத்திய கல்வித் துறை அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் திடீரென ராஜினாமா செய்தார்.
இது குறித்து தன் சமூகவலைதளப் பக்கத்தில் அவர் கூறியதாவது:
'நீட்' வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்த முதல் நாளில் இருந்தே, இந்த விவகாரத்திற்கு நான் பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். ஒருபோதும் என் பொறுப்பில் இருந்து நான் பின்வாங்கியது இல்லை. தகுதி வாய்ந்த மாணவர்களின் எதிர்காலத்தை தேர்வு மாபியாக்கள் சீரழித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
கடந்த 10 நாட்களாக நடந்த நிகழ்வு என்னை துயரத்தில் ஆழ்த்திவிட்டது. இளைஞர்கள் சக்தியே நம் நாட்டின் உண்மையான சக்தி. சமூக விரோதிகளின் சதி வலையில் இளைஞர்கள் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவே பதவியை ராஜினாமா செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், இளைஞர்களுக்கு எழுதிய கடிதத்தில், 'நாடு முழுதும் நடந்த போராட்டங்களை தேசவிரோத சக்திகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும், மாணவர்களின் எதிர்காலம் நீதிமன்ற வழக்குகளில் சிக்கி வீணாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே ராஜினாமா செய்யும் முடிவை எடுத்தேன். இது சுயமாக எடுத்த முடிவு' என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இருந்த மூத்த அமைச்சர் ஒருவர், மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக பதவியை ராஜினாமா செய்து இருப்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஜந்தர் மந்தரில் கொண்டாட்டம்!
தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத் தொடர்ந்து, டில்லி ஜந்தர் மந்தரில் திரண்டிருந்த மாணவர்கள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இனிப்புகள் வழங்கி வெற்றியைக் கொண்டாடினர்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே கூறியதாவது:
ஜனநாயகத்தில் பயமில்லாமல் துணிந்து நின்றால், அரசை பணிய வைக்க முடியும். அமைச்சரை ராஜினாமா செய்ய வைக்க முடியும் என்பதற்கு இந்நிகழ்வு சிறந்த சான்று. கரப்பான்பூச்சி ஒருமுறை வீட்டிற்குள் நுழைந்தால், எளிதில் வெளியேறாது. நாங்களும் அப்படித் தான்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், கரப்பான்பூச்சி என கூறாமல் இருந்திருந்தால், அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பி இருக்க மாட்டேன்; இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடி இருக்க மாட்டார்கள்; மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானும் ராஜினாமா செய்து இருக்க மாட்டார். இதற்காக தலைமை நீதிபதிக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கரப்பான்பூச்சி போராட்டம் வாபஸ்
மத்திய அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை அடுத்து, போராட்டத்தை திரும்ப பெறுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்தது.
இதனால், கடந்த 36 நாளாக நடந்து வந்த போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ராஜினாமாவை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் இருவரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரிடம் பேச்சு நடத்தினர்.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற முக்கிய கோரிக்கை நிறைவேறியதை அடுத்து, தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும்; போராடிய மாணவர்கள் மீது எதிர்காலத்தில் வழக்கு பதியக்கூடாது; ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும் ஏற்பதாக அமைச்சர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
வினாத்தாள் கசிவு முதல் ராஜினாமா வரை
மே 3 'நீட்' இளநிலை தேர்வு நடந்தது.
மே 12 வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் 'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மே 15 தர்மேந்திர பிரதான் விளக்கம்; சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவு.
மே 16 அபிஜித் தீப்கே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை நிறுவினார்.
ஜூன் 20 ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் தொடங்கியது.
ஜூன் 21 மறுதேர்வு நடந்தது.
ஜூலை 16 மறுதேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஜூலை 20 பார்லி., நோக்கி பேரணி தடியடி, கண்ணீர் புகை, 118 போலீசார் உட்பட பலர் காயம்.
ஜூலை 25 தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.
ராஜினாமா செய்த 2வது அமைச்சர்
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை, 2014 மே 26ல் பதவியேற்றது. இந்த 12 ஆண்டுகளில் மக்களின் அழுத்தம் காரணமாக ராஜினாமா செய்த இரண்டாவது மத்திய அமைச்சரானார் தர்மேந்திர பிரதான். இதற்கு முன், வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருந்த எம்.ஜே. அக்பர், 2018 அக்., 17ல் ராஜினாமா செய்திருந்தார். பெண் பத்திரிகையாளர்களின் தொடர் பாலியல் புகார் காரணமாக இவர் ராஜினாமா செய்தார்.
புதிய கல்வி அமைச்சர் நியமனம்!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை தொடர்ந்து, மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சராக உள்ள பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஏற்றார். தொடர்ந்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக உள்ள பிரகலாத் ஜோஷிக்கு, கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கப்பட்டது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
