UPDATED : ஜூன் 17, 2025 12:00 AM
ADDED : ஜூன் 17, 2025 08:19 AM
 கோவை:
 மத்திய அரசின் வனவியல் தேர்வில், ஆள்மாறாட்டம் செய்த உ.பி., வாலிபரை, கோவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மத்திய அரசின் வனவியல் ஆராய்ச்சி நிறுவனம், பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள காலி பணியிடங்களை, தேர்வு நடத்தி மத்திய அரசு நிரப்பி வருகிறது. கடந்த, பிப்., 9ம் தேதி இதற்கான தேர்வு கோவை, நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்தது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தேர்வு எழுதினர்.
தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் உள்ளிட்டவைகளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
இதில், கோவை வன மரபியல் மற்றும் மர வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த துர்கேஷ் குமார், 33 என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவரின் கைரேகையை பரிசோதனை செய்து பார்த்த போது, தேர்வு எழுதிய போது எடுக்கப்பட்ட கைரேகையுடன் ஒத்துப்போகவில்லை. அவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது உறுதியானது.
கோவை வன மரபியல் மற்றும் மர வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் யசோதா, சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் துர்கேஷ் குமார் மீது வழக்கப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

