அரசு உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்துங்க! பெற்றோர் வலியுறுத்தல்
அரசு உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்துங்க! பெற்றோர் வலியுறுத்தல்
UPDATED : டிச 19, 2024 12:00 AM
ADDED : டிச 19, 2024 10:16 AM

உடுமலை:
மலையாண்டிபட்டணம் அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகே மலையாண்டிபட்டணம் அரசு நடுநிலைப்பள்ளியாக இருந்து, 2005 - 06ம் கல்வியாண்டில், உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் தற்போது, 300 மாணவர்கள் படிக்கின்றனர்.
பள்ளி உயர்நிலையாக தரம் உயர்த்தப்பட்டது முதல், பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது.
பள்ளி வளாகத்தை சீரமைப்பதில், பள்ளி நிர்வாகத்தினர் ஆர்வத்தோடு செயல்படுகின்றனர். பள்ளி வளாகம் பசுமை நிறைந்ததாக மாற்றும் வகையில், மரக்கன்றுகளை அதிகளவில் நட்டு, அவற்றை மாணவர்கள் பராமரிக்கின்றனர்.
பொதுத்தேர்வுக்கு மாணவர்களை திறம்பட செயல்பட வைப்பதும், கற்றலில் பின்தங்கியுள்ளவர்களை தேர்ச்சி பெறச்செய்வதும், பெற்றோரிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்பள்ளியில் மேல்நிலை வகுப்பு இல்லாததால், சுற்றுப்பகுதி மாணவர்கள் பஸ் பயணம் செய்து, வேறு பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. போதிய பஸ் வசதி இல்லாததால், மேல்நிலை வகுப்புகளில் மாணவர்களை சேர்ப்பது, பெற்றோருக்கு பெரிதும் சவாலாக உள்ளது.
மாணவர்கள் முழுமையாக பயன்பெறும் வகையில், இப்பள்ளியை மேல்நிலையாக தரம் உயர்த்த, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:
அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலையாக தரம் உயர்த்துவதற்கு, சில நிபந்தனைகள் உள்ளன. குறிப்பாக, மாணவர் எண்ணிக்கை அதிகரித்து இருக்க வேண்டும். மலையாண்டிபட்டணத்துக்கு அருகிலுள்ள பகுதிகளிலிருந்து போதிய பஸ் வசதி இல்லை.
இதுகுறித்து பள்ளியின் சார்பில், பஸ்கள் இயக்குவதற்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பஸ் வசதி இருக்கும் பட்சத்தில், மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.
இவ்வாறு கூறினர்.