விசா பிணைத்தொகை விதிமுறையை 50 நாடுகளுக்கு நிரந்தரமாக்கியது அமெரிக்கா
விசா பிணைத்தொகை விதிமுறையை 50 நாடுகளுக்கு நிரந்தரமாக்கியது அமெரிக்கா
UPDATED : ஆக 03, 2026 06:16 PM
ADDED : ஆக 03, 2026 06:18 PM

வாஷிங்டன்:
கடந்தாண்டு சோதனை முறையில் கொண்டு வந்த விசா பிணைத்தொகை விதிமுறை திட்டத்தை 50 நாடுகளுக்கு நிரந்தரமாக மாற்றியுள்ள அமெரிக்கா, அதற்கான தொகையை 19 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.
அமெரிக்காவுக்கு வணிகம் மற்றும் சுற்றுலா விசாவில் செல்பவர்கள், அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்த பிறகும், அங்கேயே சட்டவிரோதமாக தங்கிவிடுகின்றனர். இதை முழுமையாக தடுக்கும் வகையில் அந்நாட்டு வெளியுறவுத்துறை ஓர் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கு 'விசா பாண்டு' என பெயரிட்டதுடன், சோதனை முறையில் இந்த திட்டத்தை கடந்தாண்டு செயல்டுத்தியது.
இந்நிலையில், விசா பிணைத்தொகை திட்டத்தை 50 நாடுகளுக்கு அமெரிக்கா நிரந்தரமாக்கியுள்ளது. ஆப்ரிக்க கண்டத்தைச் சேர்ந்த 30 நாடுகள் உட்பட 50 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த புதிய விதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். நம் அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் மற்றும் பூடானும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், இந்தியாவின் பெயர் இடம்பெறவில்லை. எனவே, இந்தியர்களுக்கு இந்த புதிய விதிமுறையால் எவ்வித பாதிப்பும் இல்லை. இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச பிணைத்தொகையாக 4.75 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது அது முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகள் கூறியதாவது:
நாளை முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. விசா வழங்கும் போது, சூழ்நிலைக்கு ஏற்ப, 9.50 லட்சம் முதல் 19 லட்சம் ரூபாய் வரை பிணைத்தொகையை விண்ணப்பதாரர்களிடம் இருந்து தூதரக அதிகாரிகள் வசூலிக்கலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் வசூலிக்கப்பட்ட பிணைத்தொகை திருப்பி தரப்படும்.
விசா கிடைத்து அமெரிக்காவுக்கு சென்ற பின், அதற்கான காலம் முடிவதற்குள் மீண்டும் சொந்த ஊர் திரும்பினால் அந்த தொகை முழுமையாக திருப்பித் தரப்படும். ஒருவேளை, விசாக்காலம் முடிந்து அங்கேயே தங்கிவிட்டால், பிணைத்தொகையை அரசே எடுத்துக் கொள்ளும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
