வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா
வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா
UPDATED : மே 03, 2024 12:00 AM
ADDED : மே 03, 2024 11:57 AM
வில்லியனுார்:
புதுச்சேரி, அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரியில் 10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு வெங்கடேஸ்வரா கல்வி குழும சேர்மன் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கல்வி குழும நிறுவனர் ராதா, மேலாண் இயக்குனர் ராஜீவ்கிருஷ்ணா மற்றும் நிர்வாக இயக்குனர் மவுஸ்மி முன்னிலை வகித்தனர். மருத்துவக் கல்லுாரி கண்காணிப்பாளர் லோகநாதன் வரவேற்றார். கல்லுாரி இயக்குனர் ரத்தினசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.
மலேசியா அமிஸ்ட் பல்கலைக்கழக பேராசிரியர் சேதுராமன், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
மருத்துவ உலகில் மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகள், அதற்குரிய மருந்துகள் அனைத்தையும் அறிந்து சேவையாற்ற வேண்டும். அனைத்து நோய்களையும் குணமாக்கக்கூடிய அதிநவீன மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும். கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவர்களின் சேவை உலகளவில் பேசப்பட்டது. அதுபோன்ற பேரிடர்களை எதிர்கொள்ள மருத்துவர்கள் தயாராக வேண்டும் என்றார்.
விழாவில் மருத்துவ மாணவர்கள் 219 பேருக்கு பட்டங்கள் வழங்கினர். முன்னதாக பல்கலை அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்ற மாணவி சுதாஷினா, இரண்டாம் இடம் பிடித்த ஷில்பா, மூன்றாம் இடம் பிடித்த ஸ்ரீரஞ்சனி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி வித்யா, பொதுமேலாளர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மருத்துவக் கல்லுாரி துணை முதல்வர் வினோத் நன்றி கூறினார்.