துணைவேந்தர் - பதிவாளர் மோதல் உச்சம்; பூட்டு உடைத்து பொறுப்பேற்றார் புதிய பதிவாளர்!
துணைவேந்தர் - பதிவாளர் மோதல் உச்சம்; பூட்டு உடைத்து பொறுப்பேற்றார் புதிய பதிவாளர்!
UPDATED : டிச 31, 2024 12:00 AM
ADDED : டிச 31, 2024 12:35 PM
தஞ்சை:
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பொறுப்பு துணைவேந்தர் மற்றும் பொறுப்பு பதிவாளரிடையே ஏற்பட்ட மோதலில், பதிவாளர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டது.
கடந்த 2018-19ம் ஆண்டு நடந்த பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக துணைவேந்தருக்கு புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையும் விசாரணை நடத்தி வரும் நிலையில், அப்போதைய துணைவேந்தராக இருந்த பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, திருவள்ளுவன் துணைவேந்தராக செயல்பட்டு வந்தார். நியமன முறைகேடு புகாரை முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி, துணைவேந்தர் திருவள்ளுவன் கவர்னரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதையடுத்து, பொறுப்பு துணைவேந்தராக சங்கர் நியமிக்கப்பட்டார். அதேபோல, 2022ம் ஆண்டு முதல் பொறுப்பு பதிவாளராக தியாகராஜன் இருந்து வருகிறார். தற்போது, இவர்களுக்கு இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த டிச., 24ம் தேதி நியமன முறைகேட்டின் மூலம் பொறுப்பு பதிவாளராக இருக்கும் தியாகராஜன் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அவரை சஸ்பெண்ட் செய்வதாக பொறுப்பு துணைவேந்தர் சங்கர் உத்தரவிட்டார். மேலும், புதிய பதிவாளராக வெற்றிச்செல்வனை நியமனம் செய்தும் ஆணையிட்டார்.
ஆனால், கூட்டு குழுவிற்கு தான் அனைத்து அதிகாரமும் இருப்பதாகவும், பொறுப்பு துணைவேந்தராக இருக்கும் சங்கரை தாங்கள் பார்த்து நியமித்ததாக கூறி, தியாகராஜன் அந்த உத்தரவை ஏற்க மறுத்துள்ளார். மேலும், பொறுப்பு துணைவேந்தரை நீக்குவதாகவும் ஆணை பிறப்பித்தார். துணைவேந்தரும், பதிவாளரும் ஒருவரையொருவர் நீக்கி விட்டதாக அறிக்கை விட்டது தஞ்சை தமிழ் பல்கலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், புதிய பதிவாளர் வெற்றிச்செல்வன் பொறுப்பேற்க வந்த போது, அவர் உள்ளே நுழைய முடியாதபடி, அறைக்கு பதிவாளர் தியாகராஜன் பூட்டு போட்டார். இதையடுத்து, போலீசார் முன்னிலையில், பதிவாளரின் அறையின் பூட்டை துணைவேந்தர் தரப்பு ஊழியர்கள் உடைத்தனர். அதன்பிறகு உள்ளே சென்ற வெற்றிச்செல்வன், பொறுப்பை ஏற்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். இதனால், தஞ்சை தமிழ் பல்கலையில் பதற்றம் நிலவி வருகிறது. இதையொட்டி, போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் கூறியதாவது:
ஒரு சிறுபிள்ளைத்தனமான செயலாக கருதுகிறேன். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு தமிழக அரசு வெள்ளி விழா கொண்டாடி வரும் நிலையில், துணைவேந்தர் பணிகளை கவனிக்க கவர்னர் பதிவாளர் பொறுப்பாளரான எனக்கு கடிதம் வழங்கப்பட்டது. என்னால், பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சங்கர், தன்னிச்சையாக சர்வாதிகாரத்தோடு செயல்பட்டுள்ளார். இது வேதனைக்குரியது.
நீங்களும், துணைவேந்தரும் வெளியிட்ட ஆணையை ரத்து செய்துவிட்டு தொடர்ந்து பணியாற்றுமாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கூட்டு குழு கூட்டத்தை கூட்டி முடிவெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், இதுவரை எந்த பல்கலையிலும் நடக்காத கேலி கூத்தான நிகழ்வை நடத்தியுள்ளார். சமூக ஆர்வலர் எனச் சொல்லிக் கொள்ளும் நெடுஞ்செழியனின் ஆதரவாளர் தான் வெற்றிச்செல்வன். தேவையான கல்வித்தகுதியுடன் இந்தப் பல்கலையில் பணியாற்றி வந்தாலும், எங்கள் 40 பேருக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர். துணைவேந்தர் சங்கரின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை முடிவடைந்து அறிக்கை தயாரான போதும், அதனை வெளியிட மறுக்கிறார்கள், எனக் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து பொறுப்பு துணைவேந்தர் சங்கர் கூறுகையில், தஞ்சை தமிழ் பல்கலை பதிவாளர் அறை உடைக்கப்படவில்லை. திறக்கப்பட்டது. முறையாக கமிட்டி கூட்டம் நடத்தி, அதில் எடுக்கப்பட்ட முடிவின்படியே அறையின் கதவு திறக்கப்பட்டுள்ளது. துணைவேந்தருக்கான அதிகாரங்கள் அனைத்தும், பொறுப்பு துணைவேந்தருக்கும் இருக்கிறது. பல்கலையில் 40 பேர் நியமன முறைகேடு வழக்கு வரும் 8ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 40 பேர் பட்டியலில் பொறுப்பு பதிவாளராக இருந்த தியாகராஜன் பெயரும் இருப்பதால் தான் அவர் நீக்கப்பட்டார், எனக் கூறினார்.