கவர்னர் - முதல்வர் அதிகாரப்போரால் துணைவேந்தர்கள் குழப்பம்!
கவர்னர் - முதல்வர் அதிகாரப்போரால் துணைவேந்தர்கள் குழப்பம்!
UPDATED : ஏப் 23, 2025 12:00 AM
ADDED : ஏப் 23, 2025 09:52 PM

மதுரை: 
தமிழக உயர் கல்வித்துறையில் கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே எற்பட்டுள்ள அதிகார போருக்கு இடையே கவர்னர் ரவி அழைப்பு விடுத்துள்ள இரண்டு நாள் ஊட்டி மாநாட்டில் பங்கேற்பதா வேண்டாமா என்ற குழப்பம் துணைவேந்தர்களுக்குள் எழுந்துள்ளது.
இதற்கிடையே துணைவேந்தர்களை அச்சுறுத்தும் வகையில் தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு பேசியதும் அவர்களை அச்சமடையவைத்துள்ளது.
உயர்கல்வி தொடர்பான மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, பல்கலைகளின் வேந்தர் அதிகாரம் தற்போது முதல்வர் வசம் வந்துவிட்டதாக மாநில அரசின் பல்வேறு நடவடிக்கைகள் உணர்த்துகிறது.
முதன்முறையாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பல்கலை துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் உயர்கல்வி மேம்பாடு தொடர்பாக ஆலோசனை அளிக்கப்பட்டது. ஆனால் பல்கலை நிர்வாக, நிதிசார்ந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்காமல் தமிழக அரசு ஒதுங்கிக்கொண்டது.
இந்நிலையில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேநேரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரும் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், டில்லி சென்ற தமிழக கவர்னர் ரவி, துணை ஜனாதிபதியை சந்தித்தது விவாதத்திற்கு வழிவகுத்தது.
மாநாட்டிற்கு கவர்னர் அழைப்பு
இதன் தொடர்ச்சியாக கவர்னர் சார்பில் ஆண்டுதோறும் நடக்கும் பல்கலை துணைவேந்தர்களுக்கான மாநாடு இந்தாண்டு ஏப்., 25, 26 ல் ஊட்டியில் நடக்கும் என கவர்னர் தரப்பு அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு கருப்பொருள் விவாதிக்கப்படும்.
இம்மாநாட்டில் உயர் கல்வியை ஏ.ஐ., தொழில் நுட்பம் மூலம் எவ்வாறு மேம்படுத்தலாம் என்ற தலைப்பில் விவாதிக்கப்படவுள்ளது. ஆனால் தமிழக கவர்னர், முதல்வருக்கு இடையே நடக்கும் அதிகார போருக்கு இடையே கவர்னர் அழைப்பு விடுத்துள்ள இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டுமா வேண்டாமா என பல்கலை துணைவேந்தர்கள் பெரிய மனப்போராட்டத்தில் உள்ளனர்.
மாநாட்டில் பங்கேற்றாலும், இல்லையென்றாலும் கவர்னர், முதல்வர் என யாராவது ஒரு தரப்பின் அதிருப்தியை துணைவேந்தர்கள், பதிவாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் அவர்கள் மனக்குழப்பத்தில் உள்ளனர்.
தி.மு.க., எம்.பி., மிரட்டல்
இதற்கிடையே தி.மு.க., எம்.பி., டி.ஆர்., பாலுவிடம் இந்த விவகாரம் தொடர்பாக கேட்ட போது, கவர்னர் மாநாட்டில் துணைவேந்தர்கள் பங்கேற்பார்களா என பொறுத்திருந்து பாருங்கள். சுயநினைவோடு இருப்பவர்கள், நியாயமாக சிந்திப்பவர்கள் இப்படி நிச்சயம் செய்ய மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். இவரது பேச்சு, துணைவேந்தர்களை மிரட்டும் வகையில் உள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து துணைவேந்தர்கள் சிலர் கூறியதாவது: 
இச்சூழ்நிலை முதல்முறையாக ஏற்பட்டுள்ளது. எங்களை நியமிக்கும் கவர்னரும், சம்பளம் வழங்கும் அரசின் முதல்வரும் முக்கியம். மாநில அரசு தாக்கல் செய்த மசோதாக்கள் அடிப்படையில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவில், வேந்தர் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு துணைவேந்தரை நியமிக்க, நீக்கும் அதிகாரம் மட்டுமே முதல்வருக்கு இருக்கலாம்.
ஆனால் பட்டமளிப்பு விழாக்களில் மாணவர்களுக்கான பட்டச் சான்று வழங்கும் கிரேஸ் போர்டுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் இன்னும் கவர்னர் தலைமையில் உள்ள செனட்டுக்கு தான் உள்ளது. இது உட்பட யு.ஜி.சி., வழிகாட்டுதல்கள் கவர்னர் சார்ந்ததாக தான் உள்ளது. எனவே பல்கலையை வழிநடத்த கவர்னர், முதல்வர் என இருவரின் உறவும் அவசியம். ஆனால் எம்.பி., பாலு பேசியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இதுவரை கவர்னர் மாநாட்டில் பங்கேற்பதா வேண்டாமா என எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுபோன்ற சூழல் உயர்கல்வியை வலுவிழக்க செய்யும். துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக தமிழக அரசின் உத்தரவும், அதற்கு கவர்னரின் எதிர்வினைக்கு ஏற்ப முடிவு எடுக்கும் நிலையில் உள்ளோம் என்றனர்.
                 

