UPDATED : ஜூன் 16, 2025 12:00 AM
ADDED : ஜூன் 16, 2025 10:30 AM
விஜயபுரா: 
நடப்பாண்டுக்கான நீட் தேர்வில், முதல் 100 இடங்களில், கர்நாடகாவை சேர்ந்த ஏழு மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், விஜயபுராவை சேர்ந்த மருத்துவ தம்பதி மகன், மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான நீட் தேர்வில், விஜயபுராவில் உள்ள சஞ்சீவினி மருத்துவமனையில் டாக்டர்களாக இருப்பவர்கள் சித்தப்பா சொன்னாடா, மீனாட்சி சொன்னாடாவின் மகன் நிகில் சொன்னாடா, 720 மதிப்பெண்களுக்கு 670 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து நிகில் கூறியதாவது:
நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், தேசிய அளவில் 17வது இடம் பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இது மகிழ்ச்சி அளிக்கிறது. எய்ம்சில் மருத்துவம் படிக்க விரும்புகிறேன். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்ற ஆசை உள்ளது.
என் பெற்றோர் மருத்துவர் என்பதால், நானும் மருத்துவராக விரும்பினேன். எதிர்காலத்தில் எங்கள் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்ற விரும்புகிறேன். கல்லுாரியில் படிக்கும்போது ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் பேட்மின்டன், சதுரங்கம் விளையாடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
 

