UPDATED : ஜூலை 24, 2025 12:00 AM
ADDED : ஜூலை 24, 2025 11:01 AM
புதுடில்லி:
கடந்த, 2020ல் கொரோனா பரவலைத் தொடர்ந்து, சீனாவில் படித்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாடு திரும்பினர். அந்த சமயம், லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, படிப்பைத் தொடர மீண்டும் சீனா செல்ல நினைத்த இந்திய மாணவர்களுக்கு அனுமதி வழங்காமல் அந்நாட்டு அரசு இழுத்தடித்தது. இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நம் நாட்டு அரசு, சீன முதலீடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. நுாற்றுக்கணக்கான சீன செயலிகளையும் தடை செய்தது.
மேலும் சீனர்களுக்கான சுற்றுலா விசாவை நிறுத்துவதாக அறிவித்தது. ஏற்கனவே வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்களையும் ரத்து செய்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக சீனர்களுக்கான சுற்றுலா விசா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது, இருநாடுகள் இடையிலான எல்லைப் பிரச்னையில் ஓரளவு தீர்வு ஏற்பட்டுள்ளதை அடுத்து, சீனர்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சீன குடிமக்கள் இந்திய சுற்றுலா விசா வேண்டி இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, சீனாவில் உள்ள இந்திய துாதரகம் அறிவித்துள்ளது.
ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் மற்றும் பிற தேவையான ஆவணங்களுடன், பீஜிங், ஷாங்காய் மற்றும் குவாங்சோவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களுக்கு நேரில் சென்று சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.