அரசு பல்கலையில் சேர்க்கையை அதிகரிக்க வி.ஐ.டி., விஸ்வநாதன் வலியுறுத்தல்
அரசு பல்கலையில் சேர்க்கையை அதிகரிக்க வி.ஐ.டி., விஸ்வநாதன் வலியுறுத்தல்
UPDATED : செப் 27, 2025 08:49 AM
ADDED : செப் 27, 2025 08:50 AM
சென்னை:
''அரசு நடத்தும் பல்கலையில், அதிக மாணவ - மாணவியரை சேர்க்க வேண்டும்,'' என, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் வலியுறுத்தினார்.
வேலுார் வி.ஐ.டி., பல்கலை வளாகத்தில், 'கிராவிடாஸ் - 2025' எனும், மூன்று நாள் அறிவுசார் விழா, நேற்று துவங்கியது. இதில், 207 நிகழ்வுகள், 57 பயிற்சி பட்டறைகள், 51 ஹேக்கதான், ரோபோவார், 'ட்ரோன் ஷோ' ஆகியவை, நாளை வரை நடக்க உள்ளன. நேற்று துவக்க விழாவில், பல்கலை வேந்தர் விஸ்வநாதன், அபுதாபி நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் மஜித் அலி அல் மன்சூரி ஆகியோர் பங்கேற்று பேசியதாவது:
விஸ்வநாதன்: அரசு நடத்தும் பல்கலை, கல்லுாரிகளில் மாணவ மாணவியரை அதிக அளவில் சேர்க்க வேண்டும். வகுப்பறை கட்டடம், ஆய்வகம், ஆசிரியர்கள் நியமனம் என, செலவீனம் அதிகமாக இருப்பதால், அரசு மாணவ - மாணவியர் சேர்க்கையை கட்டுப் படுத்துகிறது.
அரசு பல்கலையில், 1,000 அல்லது 2,000 மாணவர்கள் மட்டும் படித்து வருகின்றனர். இந்நிலை மாற வேண்டும்.
கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 முதல் 23 வயதுக்குட்பட்ட 14 கோடி பேரில், நான்கு கோடி பேர் மட்டுமே, உயர்கல்வி படிக்கின்றனர். மீதம் உள்ளவர்களின் நிலையை அரசு சிந்திக்க வேண்டும்.
இந்தியா 2047ல் வளர்ந்த நாடாக மாற வேண்டுமெனில், அறிவியல், தொழில்நுட்பம், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
மஜித் அலி அல் மன்சூரி:
உலகம் முழுதும் இணையதளம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என, அனைத்து கண்டுபிடிப்புகளும், விஞ்ஞானிகளின் விடாமுயற்சியால் உருவானவை. மாணவர்கள், தொழில்நுட்ப திறன் வாய்ந்தவர்களாக திகழ வேண்டும். செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, பருவ நிலை மாற்றம் ஆகிய சவால்களுக்கு, மாணவர்கள் தீர்வு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
விழாவில், வி.ஐ.டி. துணைத் தலைவர் சேகர் விஸ்வநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டரெட்டி, துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.