சுற்றுச்சுவர் இல்லாத தொழிற்பயிற்சி நிலையம் கேள்விக்குறியாகும் மாணவர்கள் பாதுகாப்பு
சுற்றுச்சுவர் இல்லாத தொழிற்பயிற்சி நிலையம் கேள்விக்குறியாகும் மாணவர்கள் பாதுகாப்பு
UPDATED : மே 30, 2024 12:00 AM
ADDED : மே 30, 2024 09:21 AM
உடுமலை:
உடுமலை அரசு கலைக்கல்லுாரி எதிர்புறம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை, மடத்துக்குளம் என பல்வேறு பகுதிகளிலிருந்தும், 200க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.
உடுமலைக்கு தொழிற்பயிற்சி நிலையம் கொண்டுவரப்பட்ட நேரத்தில், வாடகைக்கட்டடத்தில் இயங்கியது. தொடர்ந்து கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பேராசிரியர்களின் கோரிக்கை அடிப்படையில், அரசு கலைக்கல்லுாரிக்கு எதிரில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, இரண்டாண்டுகளாக செயல்படுகிறது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மாணவர்கள் அறிந்து, அதன் வாயிலாக பயிற்சி பெறுவதற்கு உயர்தர ஆய்வகமும் கடந்தாண்டு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது.
ஆனால் கட்டடத்துக்கு மட்டுமின்றி, மாணவர்களுக்கும் பாதுகாப்பில்லாத வகையில் சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது.அப்பகுதியில் குடியிருப்புகளும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் குடிமகன்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின் இடத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
கட்டமைப்பை பராமரிக்கவும், மாணவர்களுக்கு உறுதியான பாதுகாப்பு வழங்கவும், புதிய கல்வியாண்டில் தொழிற்பயிற்சி நிலையத்தை சுற்றிலும் சுவர் அமைக்க வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.