எங்கள் எதிர்காலத்துக்காக ஓட்டு போடுங்கள்; பெற்றோருக்கு மாணவர்கள் கடிதம்
எங்கள் எதிர்காலத்துக்காக ஓட்டு போடுங்கள்; பெற்றோருக்கு மாணவர்கள் கடிதம்
UPDATED : ஏப் 04, 2024 12:00 AM
ADDED : ஏப் 04, 2024 03:50 PM
பெங்களூரு:
எங்கள் எதிர்காலத்துக்காக இம்முறை தவறாமல் ஓட்டுப் போடுங்கள் என பெற்றோருக்கு மாணவர்கள் கடிதம் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
லோக்சபா தேர்தலில் வாக்காளர்களை ஓட்டு போட வைக்க, தேர்தல் அதிகாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொலைபேசி வரும் முன், விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவர்கள், தங்கள் பெற்றோரை கடிதம் மூலம் தொடர்பு கொண்டிருந்தனர். இதையே தேர்தல் விழிப்புணர்வுக்கு பயன்படுத்த மாவட்ட, ஸ்வீப் கமிட்டி முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோருக்கு தபால் மூலம் ஓட்டுப் போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, குடகு மாவட்ட தேர்தல் ஸ்வீப் கமிட்டி திட்டமிட்டு உள்ளது.
குடகு மாவட்டத்தில், ஒன்பது உறைவிடப் பள்ளிகளும், நுாற்றுக்கும் மேற்பட்ட விடுதிகளும் உள்ளன. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பி.யு.சி., வரை 12,500 மாணவ - மாணவியர் தங்கி படிக்கின்றனர். தேர்தலில் ஓட்டுப் போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மாணவர்கள் மூலம் பெற்றோருக்கு கடிதம் எழுதும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஸ்வீப் கமிட்டி தலைவர் வர்னித் நேகி கூறியதாவது:
கடிதம் ஒரு உணர்வுபூர்வமான செய்தி. கடிதங்கள் அரிதாகிவிட்ட இக்காலத்தில், தங்கள் பிள்ளைகளிடம் இருந்து கடிதம் வரும்போது, பெற்றோர் மகிழ்ச்சி அடைவர். பிள்ளைகளின் கையெழுத்தை பார்த்து ரசிப்பர்.
தங்களின் எதிர்காலத்துக்காக ஓட்டு போடுங்கள் என எழுதியிருப்பதை பெற்றோர் பார்க்கும்போது நிச்சயமாக ஓட்டு போடுவர் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ரீல், வீடியோ போட்டி
மைசூரு மாவட்ட ஸ்வீப் கமிட்டி தலைவரும், மாவட்ட முதன்மை செயல் அதிகாரியுமான காயத்ரி வெளியிட்டுள்ள அறிக்கை:
தேர்தலில் ஓட்டு போடுவதன் அவசியம், ஓட்டின் மதிப்பு உட்பட வாக்காளர்களுக்கு புரியும்படி இரண்டு நிமிடங்களுக்கு ரீல், வீடியோ எடுக்க வேண்டும்.
குறிப்பாக ரீல், வீடியோவில் எந்த கட்சியையும் குறிப்பிடக்கூடாது. இவ்வாறு எடுக்கப்படும் வீடியோவை, sweepmysuru2018gmail.com என்ற மின்னஞ்சலுக்கு 10 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.