சட்டம் படிக்க ஆசையா... கிளாட் தேர்வுக்கு தயாராகுங்க!
சட்டம் படிக்க ஆசையா... கிளாட் தேர்வுக்கு தயாராகுங்க!
UPDATED : ஜூலை 28, 2025 12:00 AM
ADDED : ஜூலை 28, 2025 08:54 AM

திருப்பூர் :
சட்டம் படித்து நீதித்துறையில் பணியாற்ற பலரும் விரும்பினாலும், அத்தேர்வை எதிர்கொள்ளும் விதம் குறித்த விழிப்புணர்வு, போதியளவில் இல்லை' என்கின்றனர் கல்வியாளர்கள்.
இது குறித்து, திருப்பூர் மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:
நம் நாட்டில், மொத்தம், 24 தேசிய சட்டப் பல்கலைகள் உள்ளன. திருச்சியில், தேசிய சட்டப் பல்கலை அமைந்துள்ளது. இந்த பல்கலையில் வழங்கப்படும் இளங்கலை மற்றும் முதுகலை சட்டப்படிப்புகளில் இணைய, கிளாட் எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், கவுன்சிலிங் வாயிலாக பல்கலையில் உள்ள இடங்கள் நிரப்பப்படும்.
சட்டம் படிக்க பலரும் விரும்பினாலும், கிளாட் தேர்வு குறித்த விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். அடுத்த கல்வியாண்டு (2026 - 2027) மாணவர் சேர்க்கைக்கான கிளாட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிளாட் நுழைவுத் தேர்வு வரும் டிச., மாதம், 7ம் தேதி பிற்பகல், 2:00 மணி முதல், 4:00 மணி வரை நடைபெறும். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும். ஆக., 1 முதல், அக்., 31 வரை நடைபெறும்; இத்தேர்விற்கான பாட திட்டம், விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள், பின்னர் அறிவிக்கப்படும்.
கிளாட் தேர்வு என்பது, மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சட்டம் படிக்க நடத்தப்படும் தேர்வு. இத்தேர்வை சட்டப்பல்கலை கூட்டமைப்பு நடத்துகிறது. இதில், தேசிய சட்டப்பல்கலை மட்டுமின்றி, மத்திய அரசின் கீழ் இணைப்பு பெற்ற, மாநில வாரியாக சட்டப்படிப்பு வழங்கும் பல நிறுவனங்கள் இணைந்துள்ளன. இக்கல்வி நிறுவனங்களில், சட்டப்படிப்பில் இணையவும் கிளாட் தேர்வெழுத வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.