நுாலகர்களுக்கு நல்லது செய்கிறோம்; தங்கம் தென்னரசு பெருமிதம்
நுாலகர்களுக்கு நல்லது செய்கிறோம்; தங்கம் தென்னரசு பெருமிதம்
UPDATED : டிச 06, 2024 12:00 AM
ADDED : டிச 06, 2024 09:03 AM
சென்னை:
நுாலகர்களுக்கு பல திட்டங்களைச் செயல்படுத்துகிறோம்; அவர்களின் பொற்காலம் இது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
தமிழக அரசு பொது நுாலகத் துறை பணியாளர் கழகம் சார்பில், 446 ஊர்ப்புற நுாலகர்களுக்கு, மூன்றாம் நிலை பதவி உயர்வு வழங்கியதற்காக, தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நடந்தது.
விழாவில், அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
நல்ல சமூகத்தை உருவாக்கும் பொறுப்பு பள்ளிக் கல்வித் துறைக்கு உள்ளதை போல், அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்கும் பொறுப்பு நுாலகத் துறைக்கு உண்டு.
மதுரையில் உள்ள கருணாநிதி நுாற்றாண்டு நுாலகத்தை, பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல், கிராமப்புற நுாலகங்களும் தற்போது மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
தி.மு.க., ஆட்சியில், 446 நுாலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கி சிறப்பித்துள்ளோம். நுாலகர்களின் நலனுக்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி, நுாலகர்களின் பொற்காலமாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் மகேஷ் பேசுகையில், நுாலகர்களின் கோரிக்கைகள் அனைத்தும், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புற நுாலகர்கள், நகர்ப்புற நுாலகர்கள் என பாகுபாடு இன்றி, அனைவரையும் அரசு சமமாக பார்க்கிறது.
தமிழகத்தில் உள்ள நுாலகங்களை வளர்க்கும் வகையில், இலக்கியத் திருவிழா உட்பட, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம், என்றார்.