கல்லுாரி மாணவர்களை மூளைச்சலவை செய்தோம்; பயங்கரவாத அமைப்பு வாக்குமூலம்
கல்லுாரி மாணவர்களை மூளைச்சலவை செய்தோம்; பயங்கரவாத அமைப்பு வாக்குமூலம்
UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM
ADDED : ஜூலை 04, 2024 03:36 PM
சென்னை:
தடை செய்யப்பட்ட, ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்தது தொடர்பாக, சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில், 10 இடங்களில், என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சமீபத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த, தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலத்தைச் சேர்ந்த பட்டதாரி அப்துல் ரஹ்மான், 26, மற்றும் முஜிபுர் ரஹ்மான், 45, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைதான அப்துல் ரஹ்மான், என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் அளித்துள்ள வாக்குமூலம்:
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரான டாக்டர் ஹமீது உசேன் என்பவரை, கிண்டி அண்ணா பல்கலை வளாகத்தில் சந்தித்தேன்.
அவர் தான் எனக்கு, மரத்தடி நிழலில், ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்பு பற்றி, ஒரு மணி நேரத்திற்கு மேலாக வகுப்பு எடுத்தார். நாட்டில் இஸ்லாமியருக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு, இஸ்லாமிய ஆட்சியை அமைப்பது தான்.
தற்போதுள்ள அரசியல் அமைப்பை சீர்குலைக்க வேண்டும். அதற்கு தடையாக உள்ள, நீதித்துறை மீது தாக்குதல் நடத்த வேண்டும். அதற்கு உடல், மனம் ரீதியாக நாம் தயாராக வேண்டும். தமிழகத்தில் முஸ்லிம் பட்டதாரிகளை மூளைச்சலவை செய்ய வேண்டும் என்று, உத்தரவிட்டார்.
தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, ஈரோடு மற்றும் கரூர் மாவட்ட பொறுப்பாளராக என்னை நியமித்தார். என்னை போலவே, பொறுப்பாளர் களாக பலர் உள்ளனர். எங்களுக்கு, 'வாட்ஸாப்' குழுக்கள் உள்ளன. அதில், மற்றவர்கள் ஊடுருவ முடியாது.
பொறுப்பாளர்களுக்கு, சென்னை ஜானிஜான்கான் சாலையில் டாக்டர் ஹமீது உசேன் நடத்தி வந்த, மாடர்ன் எசன்சியல் எஜுகேஷன் டிரஸ்ட் அலுவலகத்தில் பயிற்சி அளிப்பார்.
நாங்கள் எல்லாம் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு செல்ல வேண்டும். அங்கு பட்டதாரி இளைஞர்களை மூளைச்சலவை செய்து தயார்படுத்த வேண்டும்.
குறிப்பாக, கல்லுாரி மாணவர்களை குறிவைத்து, அவர்களை எங்கள் வழிக்கு கொண்டு வர வேண்டும். மாணவர்களுடன் பழகி, கல்லுாரி விடுதிகளில் தங்க வேண்டும். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும்.
கல்வி உதவித்தொகை தரப்படும் என்று கூறி, ஞாயிறு தோறும் நடக்கும் ரகசிய கூட்டங்களுக்கு அழைத்து வர வேண்டும். இதுதான் எனக்கு இடப்பட்ட கட்டளை. அதன்படி, தஞ்சாவூரில் நானும், முஜிபுர் ரஹ்மானும் செயல்பட்டு வந்தோம்.
எங்களுக்கு பயங்கரவாத தாக்குதல் குறித்து, பல கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இரண்டு மாதங்களுக்கு முன் தான், வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி பெற்றோம்.இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.