UPDATED : ஜன 13, 2025 12:00 AM
ADDED : ஜன 13, 2025 09:56 AM
மழலைகளுக்கு சிலேட், குச்சி கொடுத்து அணில், ஆடு, இலை, ஈ என அரிச்சுவடி பாடமும்; அறஞ்செய்ய விரும்பு... ஆறுவது சினம் என ஆத்திச்சூடி பாடமும் தான், குழந்தைகளுக்கு ஆரம்ப கல்விக்கு தொடக்கமாக இருந்தது.
அந்த காலம் மாறிப்போச்சு. மழலை கையில் மொபைல் போன் கொடுத்தால் தான் அக்குழந்தை யூடியூப், வாட்ஸாப் கேம்ஸ்களை பார்த்தபடி பால் குடிக்கிற காலமாகிவிட்டது. இது அறிவியல் பெயரில் நடக்கும் செயலாக உள்ளது. அறியாமைக்கு துாபம் போடுவதாக தெரிகிறது.
வழக்கம்
மழலையர் மட்டுமின்றி, பலருமே மொபைல் போனில் பொழுதுபோக்குவதையே வழக்கமாக்கி உள்ளனர். இதனால் சுய சிந்தனையை இழப்பது மட்டுமின்றி மன நோயாளிகளாகவே மாற்றும் போக்காக உள்ளது. சுயசிந்தனை இல்லாமல் நுனிப்புல் மேய மட்டுமே சில புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகள் உள்ளன. அவை அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற சிந்தனையை ஏற்படுத்தாது. மனநிறைவுடன் வரலாற்றுக்கு உகந்ததாகவும் இருக்காது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருக்குறள் புத்தக வடிவம் பெற்றதால் தான் அது பொக்கிஷமாக போற்றப்படுகிறது. இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் வல்லமை திருக்குறளுக்கு உண்டு. இது ஒரு அறிவாயுதம் ஆகும்.
அதேபோல செம்மொழியின் பெருமைகளை போற்றும் பல காவியங்கள் கூட நம் பாரம்பரிய வரலாற்றை காட்டுகிறது. அவைகள் யாவுமே மனிதர்களுக்கான அறிவுச் சுரங்கங்கள் ஆகும். கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி என நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவதற்கு பெருமைக்குரிய புத்தகங்களே, நமக்கு கிடைத்த சாதனம்.
தலைமுறை
அறிவியல், ஆன்மிகம், இலக்கியம், தத்துவம் என எதுவாக இருந்தாலும் பல தலைமுறையினர் பயன்பாட்டுக்கு செழிப்பானது புத்தகமே. புத்தகத்தின் மீது பார்வை செலுத்தாமல் போனால், அவர்களை மனிதராகவே கருத முடியாது. ஆதி மனிதனின் நாகரீக வளர்ச்சிக்கு மூலமாக விளங்கியது அறிவு சார்ந்த நுால்களாகும்.
இதிகாச நுால்கள், வேதாகமம் உட்பட மத போதனைகளை இன்றுவரை ஓதுவது மனித தன்மையை புனித படுத்தவே. எனவே நுால்கள் மட்டுமே வாழ வழிவகுக்கும்; வாழ்வியலுக்கு ஒளி தரும்.
ஒருவரை, சிறந்த சமூக அக்கறையாளராக உயர்த்துவது நல்லறிஞர்களின் நுால்களாகும். முதல் பிரதமர் நேரு, தனது மகளுக்கு எழுதிய கடிதம் தான், அவரின் அரசியல் அத்தியாயம் ஆரம்பமாக வழி வகுத்தது. அதுவும் அரசியலுக்கு படிப்பினையாக ஆக்கியது.
அதே போல பல்வேறு அறிஞர்களின் கருத்துகள் சமுதாய முன்னேற்றத்துக்கு படிக்கட்டுகளாக விளங்கின.
புத்தகம் படிப்பது வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல. தம்மை தாமே ஆளுமையை உணர்த்துகிற பெட்டகமாகவும், சிறந்த நண்பனாகவும், பண்பட்ட இயந்திரமாகவும் நம்மை இயக்குகிற சக்தியாகவும் விளங்குகிறது. உலகை காட்டும் கைடு.
எனவே வரலாறு கூறும் புத்தகங்களை, அறிவுசார்ந்த வழிகாட்டுதல்களை, இதயத்தை சுத்திகரிப்பு செய்யும் ஆன்மிக புத்தகங்களை படிப்போம். அதை இன்றே துவங்குவோம்.