அறிவியலாளர்களை உருவாக்கணும்: இஸ்ரோ முன்னாள் இயக்குனர் பேச்சு
அறிவியலாளர்களை உருவாக்கணும்: இஸ்ரோ முன்னாள் இயக்குனர் பேச்சு
UPDATED : மார் 20, 2025 12:00 AM
ADDED : மார் 20, 2025 09:17 AM

கோவை :
கோவை, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், நேற்று ஆண்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்கள், சிறந்த ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
பின்னர், அவர் பேசியதாவது:
விண்வெளிக்கு பறந்து செல்லும் வாய்ப்பை கல்வி உருவாக்கும். ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு, பெற்றோர் ஆகிய நால்வரும் கூட்டணி சேர்ந்தால், குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தை செதுக்க முடியும். தனியார் பள்ளிகளையும் தாண்டி, இந்த அரசுப் பள்ளி முன்மாதிரியாக இருக்கிறது.
மாணவர்களை சரியான நேரத்தில், சரியான திசையில், சரியான வேகத்தில் அனுப்பினால் நினைத்த இலக்கையும், உயரத்தை அடைவார்கள். அறிவியல், வானியல், விண்வெளி என மாணவர்களின் திறமைக்கு ஏற்ப, அவர்கள் விரும்பியவாறு வழிநடத்த வேண்டும்.
பள்ளிகளில் மைதானங்கள் வாயிலாக, விளையாட்டு வீரர்களை உருவாக்குகிறோம். அதேபோல், அறிவியல் கூடங்களை பள்ளிகளில் அமைத்து, அறிவியலாளர்களை உருவாக்க வேண்டும்.
விவசாயம் முதல் விண்வெளித் துறை வரை, அறிவியலின் முன்னேற்றம் வரவேண்டியது அவசியம். இதன் மூலம் உலகத்தரமான மாணவர்களை உருவாக்குவது, காலத்தின் கட்டாயம். தமிழ் மொழி படித்தும் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
விரைவில் ஓய்வு பெறவுள்ள பள்ளி தலைமையாசிரியை மைதிலி, பள்ளி ஆண்டறிக்கை வாசிப்பின் நிறைவில், கண்ணீர் மல்க உரையை நிறைவு செய்தார். கல்விக் குழு தலைவர் மாலதி உட்பட பலர் பங்கேற்றனர்.