UPDATED : நவ 11, 2025 11:01 AM
ADDED : நவ 11, 2025 11:03 AM

சென்னை:
''ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பது அரசியல் வாக்கியம் அல்ல,'' என கவர்னர் ரவி தெரிவித்தார்.
'காசி தமிழ் சங்கமம் 4.0' நிகழ்ச்சி, சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நேற்று நடந்தது.
இதில், கவர்னர் ரவி பேசியதாவது:
காசி தமிழ் சங்கமம், பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையாகும். காசி, இந்தியாவின் ஆன்மிக தலைநகரம். தமிழகம் சிவனின் பூமியாக திகழ்கிறது. மத்திய அரசு, காசி தமிழ் சங்கமத்தின் வாயிலாக, தமிழகத்திற்கும், காசிக்கும் இடையிலான தொடர்பை, நாடு முழுதும் பரப்புகிறது.
கலாசாரம் மக்களின் உணர்வுகளால் எழுகிறது. எனவே, இதை யாரும் அரசியல் நோக்கத்துடன் பார்க்கக் கூடாது. நடப்பாண்டு, காசி தமிழ் சங்கமம் நிகழ்வு துவங்கப்பட்டுள்ளது. இது, 'தமிழ் கற்கலாம்' என்ற தலைப்பில் நடத்தப்படுகிறது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த 300 மாணவ - மாணவியர், தமிழகம் வந்து தமிழ் பயில இருக்கின்றனர்.
நாட்டில் உள்ள மற்ற மாநில மக்களும், தமிழ் பயில, மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அசாம் மாநிலத்தை சேர்ந்த, மாணவ - மாணவியருக்கு, கவர்னர் மாளிகையில் தமிழ் பயிற்றுவித்தோம். உலகின் மிகப் பழமையான தமிழ் மொழியை, இந்திய மக்கள் அனைவரிடமும் எடுத்து செல்கிறோம்.
'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்பது அரசியல் வாக்கியம் அல்ல; இது, உணர்வுப் பூர்வமானது. பாரதம் என்பது ஒரே குடும்பம். இழந்த கலாசாரத்தை, நாம் மீட்க முயற்சி செய்ய வேண்டும். நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும், கலாசாரம், உணவு முறைகள் வேறாக இருக்கலாம். ஆனால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கிராமங்கள், ஒரே பாரதம் என்ற உணர்வுடன் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.

