மாணவர் திறன் மேம்படுத்த துவக்கப்பள்ளியிலேயே கவனம் செலுத்தணும்!
மாணவர் திறன் மேம்படுத்த துவக்கப்பள்ளியிலேயே கவனம் செலுத்தணும்!
UPDATED : செப் 09, 2025 12:00 AM
ADDED : செப் 09, 2025 08:33 AM

பொள்ளாச்சி:
அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளிலேயே மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உரிய எழுத்து மற்றும் வாசிப்பு பயிற்சியை அளிக்க தீர்மானிக்க வேண்டுமென, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க, ஆசிரியர்கள் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இது மட்டுமல்லாமல், திறமைகளை வளர்க்கும் வகையில், பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வாறு இருந்தும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வந்தாலே தேர்ச்சி பெறலாம் என்ற நிலை நீடிப்பதால், பலர், அடிப்படை கல்வி அறிவு கூட இல்லாமல் உள்ளனர்.
மாணவர்கள் சிலர், ஒன்பதாம் வகுப்பு முன்னேறியுள்ள நிலையிலும், எழுதவும், வாசிக்கவும் தடுமாறுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், நடப்பு கல்வியாண்டு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 6 முதல் 8ம் வகுப்பு வரை, 'திறன் மாணவர்கள்' என்ற இயக்கத்தின் பேரில், கற்றலில் பின்தங்கியவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, வாரந்தோறும், 4 பாடவேளைகள் பயிற்சி அளிக்க, தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியாக பயிற்சி அளிப்பதை விட, துவக்கப் பள்ளிகளிலேயே அவர்களுக்கு முறையாக எழுத்து மற்றும் வாசிப்பு பயிற்சி அளிக்க வேண்டுமென, வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆண்டுதோறும், கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு, 'திறன்மாணவர்கள்' என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்காக, ஒதுக்கப்படும் பாடவேளை காரணமாக, நேர விரயம் ஏற்படும். ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிப்பளு ஏற்படுகிறது. படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மீது கவனம் செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது.
இதற்கு மாற்றாக, துவக்க, நடுநிலைப் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு உரிய எழுத்து மற்றும் வாசிப்பு பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல, ஆசிரியர்களை முனைப்புடன் பணிபுரிய செய்ய தொடக்கல்வித் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'திறன்மாணவர்கள்' இயக்கத்தை, துவக்கப் பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மாணவர்களின் கற்றல் திறனையும் மேம்படுத்த முடியும். அரசு பள்ளிகளின் நுாறு சதவீத தேர்ச்சி சதவீதத்தை நிலை நிறுத்த முடியும்.
இவ்வாறு, கூறினர்.