நைட் ஷிப்ட் வேலை பெண்கள் பாதுகாப்புக்கு மேற்கு வங்க அரசு புதிய திட்டம்
நைட் ஷிப்ட் வேலை பெண்கள் பாதுகாப்புக்கு மேற்கு வங்க அரசு புதிய திட்டம்
UPDATED : ஆக 19, 2024 12:00 AM
ADDED : ஆக 19, 2024 10:14 PM
கோல்கட்டா:
நைட் ஷிப்ட் வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இரவில் துணை வருபவர்கள் என்று பொருள்படும் ராத்திரேர் ஷாதி என்ற புதிய திட்டத்தை மேற்கு வங்க அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
நெருக்கடி
இதன் தொடர்ச்சியாக ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்தது. ஒருபுறம், மேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சி குற்றம் சாட்டி வருகிறது. மறுபுறம் டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
புதிய திட்டம்
சொல்லி திருத்த முடியாது; பட்டு தான் திருந்துவார்கள் என சொல்வது போன்று, தற்போது நைட் ஷிப்ட் வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டம் ஒன்றை மேற்கு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
சிறம்பம்சங்கள் பின்வருமாறு:
* பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இரவில் பெண் தன்னார்வலர்களை ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.
* நைட் ஷிப்ட் வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அலாரம் சிஸ்டம் கொண்ட பிரத்தியேக செல்போன் செயலி உருவாக்கப்பட உள்ளது. இந்த செயலியை (ஆப்) டவுன்லோடு செய்ய வேண்டும்,
* இந்த செயலி, ஆபத்து சமயங்களில் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கண்ட்ரோல் ரூம்களை தொடர்பு கொள்ளும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.
* மருத்துவமனைகள், பெண்கள் விடுதிகள், கல்லூரிகளில் நுழையும் நபர்கள் மது அருந்தியதை கண்டறியும் ப்ரீத் அனலைசர் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
* மருத்துவமனைகளில் உள்ள ஒவ்வொரு தளத்திலும் பெண்களுக்கான கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
* பெண்கள் விடுதிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
* பெண்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய கூடாது. குறிப்பாக, பெண்கள் முடிந்த அளவு நைட் ஷிப்டை தவிர்க்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.