யாரும் திருட முடியாத சொத்து எது? மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் பேச்சு
யாரும் திருட முடியாத சொத்து எது? மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் பேச்சு
UPDATED : ஜூன் 15, 2024 12:00 AM
ADDED : ஜூன் 15, 2024 10:40 AM

கோவை :
கோவை, டவுன்ஹாலில் உள்ள அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில், 64வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. பி.எட்., எம்.எட்., முடித்த 310 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி, மாணவிகளுக்குப் பட்டம் வழங்கி பேசியதாவது:
கல்வி நம்மிடம் இருந்து யாராலும் திருட முடியாத சொத்து. மாணவர்கள் நிறைய படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். படிக்கிற காலத்தில் தங்களை செதுக்கிக் கொண்டால்தான், எதிர்காலத்தில் ஜொலிக்க முடியும். உலகில் நிறைய மனிதர்களை நாம் கடக்க வேண்டியதிருக்கும்.
தடம் மாற்றமின்றி, பெண்கள் பொருளாதாரத்தில் யாரையும் சார்ந்திருக்காத நிலையை உருவாக்கி கொள்ள வேண்டும். ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் கோலோச்சும் இன்றைய காலகட்டத்தில், பி.எட்., படிப்பு மட்டும் போதாது. தொழில்நுட்பம் சார்ந்த அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பி.எட்., மாணவிகள் அரசுப் பணிகளுக்காக காத்திருக்காமல் போட்டித் தேர்வுகள், யு.பி.எஸ்.சி., தேர்வுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கைக்கான இலக்கை நிர்ணயித்து, அதற்கான பாதையில் கடினமாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவுக்கு, கல்லூரி முதல்வர் சாமிவீரப்பா தலைமை வகித்தார். விஜயா பதிப்பகம் நிறுவனர் வேலாயுதம் வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர்கள், பெற்றோர், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

