UPDATED : மே 20, 2024 12:00 AM
ADDED : மே 20, 2024 09:28 AM
திருவொற்றியூர்:
திருவொற்றியூரில், பழமைவாய்ந்த ஜெய்கோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப்பள்ளியில், 1,300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
நடந்து முடிந்த பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளில், இப்பள்ளியைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பெரும்பாலானோர் தேர்ச்சி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. அதன்படி, பிளஸ் 2 தேர்வெழுதிய, 257 மாணவ - மாணவியரில், 169 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 65.7 சதவீதம் ஆகும்.
10ம் வகுப்பு தேர்வில், 205 மாணவ - மாணவியர் தேர்வெழுதிய நிலையில், 116 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 56.5 சதவீதமாகும். அதன்படி, 44 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, கல்வி அதிகாரி கூறுகையில், மாணவர்கள் தேர்ச்சி குறைவு குறித்த காரணங்கள் ஆராயப்படுகின்றன. தோல்வியடைந்த மாணவர்கள், உடனடித் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், சிறப்பு கையேடு வழங்கி, தேர்ச்சி பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.