இதர பணிகளால் தவிக்கும் ஆசிரியர்கள் பாடம் நடத்துவது எப்போது?
இதர பணிகளால் தவிக்கும் ஆசிரியர்கள் பாடம் நடத்துவது எப்போது?
UPDATED : ஆக 12, 2025 12:00 AM
ADDED : ஆக 12, 2025 09:02 AM

பெ.நா.பாளையம்:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக அரசின் பல்வேறு விழா மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்த ஆசிரியர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதால், அவர்களுடைய ஆசிரியப் பணி பாதிக்கப்படுவதாக புகார் கூறுகின்றனர். பள்ளிகளில் ஆசிரியர்கள், கற்பித்தல் தவிர, இதர பல பணிகளை செய்ய நிரப்பந்திக்கப்படுவதால், வகுப்புகளை எடுக்க முடியாமல் தவிப்பதாக புகார் கூறுகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பள்ளிகளில் பல்வேறு விழாக்களை நடத்தி, அதில் உயர்ந்த கருத்துக்களை மாணவர்களுக்கு அறிவுறுத்தி, அது தொடர்பான அறிக்கையை அன்றே சமர்ப்பிக்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அவ்வப்போது உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்படி அரசு பள்ளிகளில் காமராஜர் விழா, கலைஞர் விழா, அண்ணா விழா, ஆசிரியர் தின விழா, குழந்தைகள் தின விழா, இலக்கிய மன்ற விழா, ஆண்டு விழா, போதை ஒழிப்பு மன்றங்கள், வானவில் மன்றம், சிறார் திரைப்படம், மொழி ஆய்வகம், நூலக மன்றம், வாசிப்பு இயக்கம், அறிவியல் கண்காட்சி, புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இது தவிர, குழந்தைகளுக்கு வைட்டமின் மாத்திரைகள், குடல் புழு மாத்திரைகள், தடுப்பூசிகள் ஆகியவை சுகாதார துறையின் மருத்துவ பணியாளர்களுடன் இணைந்து வழங்குதல், மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுகளில் பங்கு கொள்ள செய்ய வேண்டும். முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுகள், தமிழ் திறனறி தேர்வு, கலை திருவிழா, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு தேர்வுகள் மதிப்பெண்களை எமிசில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். எஸ்.எம்.சி., விழிப்புணர்வு, காலை, மாலை சிறப்பு வகுப்புகள், காவலர் பெண், ஆண் விழிப்புணர்வு கூட்டம், மருத்துவர்களின் சுகாதார கூட்டம், பெற்றோர் கூட்டம் உள்ளிட்ட அனைத்தையும் எமிசில் அவ்வப்போது பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தவிர என்.எஸ்.எஸ்., முகாம், மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவக்குதல், ஆதார் கார்டு புதுப்பித்தல், கலை திருவிழாவுக்கு மாணவர்களை பல்வேறு பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மாணவர்களின் உயரம், எடை ஆகியவற்றை கண்டறிந்து பதிவேற்றம் செய்தல், மகிழ்முற்றம், பள்ளி மாணவர்களுக்கான மின்னஞ்சல் உருவாக்கம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 'பள்ளி மாணவர்களுக்கு நல்வழி காட்டும் விழாக்களையும், அது தொ டர்பான நிகழ்வுகளையும் நடத்த ஆசிரியர்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், போதுமான ஆசிரியர்கள் இல்லாததால், அரசு அறிவுறுத்தும் அனைத்து பணிகளையும் செய்வதில் பெரும் நெருக்கடி ஏற்படுகிறது.
இதை தவிர்க்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தும் வகுப்புகளில் பாடம் எடுக்கும் நிகழ்வுகளை தவிர, பிற விழாக்கள், மன்றங்கள், மாணவர், மாணவியர்களின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் கூடுதல் ஆசிரியர் ஒருவரை நியமனம் செய்து, அவரை முழுமையாக அந்த பணிகளில் ஈடுபடுத்த முன்வர வேண்டும். இதனால் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள், எவ்வி த தடையும் இல்லாமல் திறம்பட செயல்பட முடியும் என்றனர்.