2,500 செவிலியர் பணிநிரந்தர அறிவிப்பு அரசாணை வெளியிடுவது எப்போது?
2,500 செவிலியர் பணிநிரந்தர அறிவிப்பு அரசாணை வெளியிடுவது எப்போது?
UPDATED : நவ 02, 2026 01:42 PM
ADDED : நவ 02, 2026 01:43 PM

கோவை:
சட்டசபை மானிய கோரிக்கையில், 2,500 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அரசாணை விரைவில் வெளியிட வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.
மருத்துவ பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர், அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களாக நியமிக்கப்படுவர்.
ஆரம்பத்தில் தற்காலிக பணி அடிப்படையில் நியமிக்கப்படும் இவர்கள், காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப, குறிப்பிட்ட இடைவெளியில் பணி நிரந்தம் செய்யப்படுவர்.
சட்டசபை மானியக்கோரிக்கை அறிவிப்பில், 2,500 செவிலியர்கள் நிரந்தரமாக்கப்படுவர் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை, இதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை.
இன்னும், 4,000 செவிலியர்கள் அரசுப்பணிக்கு தகுதியிருந்தும், தற்காலிக ஊழியர்களாக பணிபுரிகின்றனர். அவர்களையும் விரைவில் காலமுறை ஊதியத்திற்குள் கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்க மாநில பொதுச்செயலர் சுபின் கூறுகையில், “அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு தர ஊதியம், 4,450 ரூபாயாக உள்ள நிலையில், தற்போது புதிதாக பணிநிரந்தரம் செய்யப்படுவோருக்கு மட்டும், 2,800 ரூபாயாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது.
ஒரே பணிக்கு வெவ்வேறு தர ஊதியம் நிர்ணயிக்க கூடாது. இதில் அமைச்சர் தலையிட்டு, விதிமுறைப்படி ஊதியம் நிர்ணயித்து, விரைவில் அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
