துணைவேந்தர் தேடல் குழு நியமனம் எப்போது? பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பு
துணைவேந்தர் தேடல் குழு நியமனம் எப்போது? பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பு
UPDATED : ஜன 16, 2025 12:00 AM
ADDED : ஜன 16, 2025 11:21 AM

கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையின், தற்போதைய துணைவேந்தர் கீதாலட்சுமியின் பதவிக்காலம், மார்ச் மாதத்தில் முடிவு பெறவுள்ள நிலையில், புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பான செயல்பாடுகள், இன்னும் துவக்கப்படவில்லை.
துணைவேந்தர் நியமன விதிமுறைகளின் படி, பதவியில் உள்ள துணைவேந்தர் பணிக்காலம் முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன், புதிய துணைவேந்தர் தேடல் குழு அமைக்க பணிகள் துவக்கப்பட வேண்டும்.
பணிக்காலம் முடியும் போது, புதிய துணைவேந்தர் பதவி ஏற்கவேண்டும். ஆனால், தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இதற்கான பணிகள் துவக்கப்படவில்லை.
பல்கலை டீன்கள் சிலர் கூறுகையில், புதிய துணைவேந்தர் நியமன செயல்பாடுகளை விரைந்து துவக்க வேண்டும். பல்கலையில் முன்பே காலிப்பணியிடம் அதிகம் உள்ளது. மார்ச் மாதத்திற்கு பிறகு, தேர்வுகள், மதிப்பீடு பணி தொடர்ந்து புதிய கல்வியாண்டு துவங்கும் நேரம் என்பதால், துணைவேந்தர் காலியிடமாக இருப்பது, நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால், புதிய துணைவேந்தர் பணி நியமன செயல்பாடுகளை, விரைவுபடுத்த வேண்டும் என்றனர்.
வேளாண் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் ராமசாமி கூறுகையில், துணைவேந்தர் நியமனத்தில், 2017 வழிகாட்டுதலின் படி, விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இதில், துணைவேந்தர் பதவிக்காலம் முடிவதற்கு முன், தேடல் குழு பணிகளை துவக்கி, பணிக்காலம் முடியும் போது, புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட வேண்டும். ஆகவே தமிழ்நாடு வேளாண் பல்கலையில் புதிய துணைவேந்தர் நியமனம் சார்ந்த, செயல்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும், என்றார்.