எப்பதான் தருவீங்க: 9 மாதங்களாக சம்பளம் இல்லாததால் துாய்மை பணியாளர் புலம்பல்
எப்பதான் தருவீங்க: 9 மாதங்களாக சம்பளம் இல்லாததால் துாய்மை பணியாளர் புலம்பல்
UPDATED : ஜூன் 09, 2025 12:00 AM
ADDED : ஜூன் 09, 2025 10:55 AM
மதுரை:
மதுரையில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் துாய்மை பணியாளர்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை.
இதனால் பள்ளி வளாக துாய்மை கேள்விக்குறியாகி வருகிறது. தலைமையாசிரியர்கள் தங்களின் சொந்த பணத்தை செலவிட்டு சமாளிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அரசு பள்ளிகளில் துாய்மை பணியாளர், இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. தற்காலிகமாக நியமிக்கப்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு தொடக்க பள்ளியில் ரூ.1000, நடுநிலை ரூ.2 ஆயிரம், உயர் நிலை ரூ.3ஆயிரம், மேல்நிலை பள்ளியில் ரூ.4 ஆயிரம் என மாதம் சம்பளம் வழங்கப்படுகிறது. இத்தொகை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் ஒதுக்கப்படுகிறது. இதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது.
மதுரையில் 15 கல்வி ஒன்றியங்களில் மேற்கில் 9 மாதங்களாகவும், மேலுாரில் 7, மதுரை கிழக்கில் 8, திருப்பரங்குன்றம் 7 மாதங்கள் சம்பளம் வழங்கப்படவில்லை. ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்பட்டும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் பலர் அதிருப்தியில் உள்ளனர்.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
இவர்களுக்கான சம்பளம் வழங்க உத்தரவிடும் முழு பொறுப்பு கலெக்டருக்கு தான் உள்ளது. கல்வித்துறையில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு எத்தனை முறை நினைவூட்டினாலும், இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என ஒற்றை வார்த்தையில் பதில் சொல்கின்றனர். சம்பளம் அவர்களின் வாழ்வாதாரம். இதனால் நாங்கள் பண உதவி செய்து வருகிறோம்.
துாய்மை பணியாளர்களின் சம்பள பிரச்னையை தீர்க்க கலெக்டர் சங்கீதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.