அரசுப்பள்ளிகளில் சேர்ந்த 1,742 மாணவ, மாணவியர் எங்கே போனார்கள்? கணக்கெடுப்பில் அதிர்ச்சி!
அரசுப்பள்ளிகளில் சேர்ந்த 1,742 மாணவ, மாணவியர் எங்கே போனார்கள்? கணக்கெடுப்பில் அதிர்ச்சி!
UPDATED : ஜூன் 19, 2025 12:00 AM
ADDED : ஜூன் 19, 2025 11:00 AM

கோவை:
கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் எண்ணிக்கை, 1,742 ஆக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், இங்கு குடிபெயர்வின் காரணமாக, இடைநிற்றல் எண்ணிக்கை அதிகரித்துஇருப்பது தெரியவந்துள்ளது.
2024 - 2025 கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் இடைநிற்றல் கணக்கிடும் பணிகள் முடிவடைந்துள்ளன.
அதன்படி, கோவை மாவட்டத்தில், 1 முதல் 5ம் வகுப்பில் 656 பேர், 6 முதல் 8ம் வகுப்பில் 256 பேர், 9 மற்றும் 10ம் வகுப்பில் 515 பேர், 11 மற்றும் 12ம் வகுப்பில் 315 பேர், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.
முக்கியமாக, 9 மற்றும் 10ம் வகுப்புகளில், உடல்நலக் குறைவு காரணமாக, பள்ளியை விட்டு விலகிய மாணவர்கள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
குடிபெயர்வதும் காரணம்
அதே நேரத்தில், அசாம், பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து, குடிபெயர்ந்து வந்த குழந்தைகள், ஆரம்பத்தில் பள்ளிகளில் சேர்க்கை பெற்றாலும், பலர் கல்வியை பாதியிலேயே கைவிடுகின்றனர்.
இவர்களில், பெரும்பாலான மாணவர்களுக்கு ஆதார் எண், பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் இல்லாததால், எவ்வளவு பேர் இவ்வாறு படிப்பை கைவிட்டார்கள் என்பன போன்ற விவரங்களை, எமிஸ் தளத்தில் துல்லியமாக, பதிவு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
20க்கும் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் படிக்கும் 126 அரசு பள்ளிகள்
அரசுப்பள்ளிகளில் சேர்க்கை சதவீதத்தை உயர்த்திக் காண்பிக்க, முறையான ஆவணங்கள் இல்லாமலே குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதுதான், இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம்.
ஆவணங்கள் கட்டாயம்
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பல்வேறு பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும் போது, பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆதார், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் சேர்க்கை பெற்றுள்ளனர். அதனால், எமிஸ் தளத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ள முடிவதில்லை.
ஆவணமின்றி பள்ளியில் சேர்ந்த மாணவர்கள், பிற்பாடு ஆதார் சிறப்பு முகாமில் ஆதார் எண் பெற்றாலும், பின்னர் படிப்பை பாதியில் நிறுத்தி, மீண்டும் தங்கள் மாநிலங்களுக்கு திரும்பி செல்கின்றனர்.
மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் போதே, உரிய ஆவணங்களை சரிபார்த்து சேர்க்கை நடத்த வேண்டியது, கட்டாயமாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

