அன்பழகன் விருதுக்கான ரூ.10 லட்சம் எங்கே? தேர்வான பள்ளிகளுக்கு வழங்காததால் ஏமாற்றம்
அன்பழகன் விருதுக்கான ரூ.10 லட்சம் எங்கே? தேர்வான பள்ளிகளுக்கு வழங்காததால் ஏமாற்றம்
UPDATED : ஜூலை 25, 2025 12:00 AM
ADDED : ஜூலை 25, 2025 09:50 AM

பொள்ளாச்சி:
தமிழகத்தில், அன்பழகன் விருதுக்கு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, பாராட்டு சான்றிதழ், நினைவு கேடயம் வழங்கியுள்ள நிலையில், பரிசுத்தொகை, 10 லட்சம் ரூபாய் விடுவிக்காததால், தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 2022 முதல், ஆசிரியர் திறன், தலைமைத்துவம், கற்றல், கற்பித்தல் மற்றும் மாணவர்களின் பன்முக திறன்களை ஊக்குவிக்கும் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து, பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்படுகிறது.
தகுதி அடிப்படை கடந்த, 2024 - 25ம் கல்வியாண்டிற்கான விருதுக்கு, மாவட்டத்திற்கு இரு பள்ளிகள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன. அதாவது, நடுநிலைப்பள்ளி அல்லது மேல்நிலைப்பள்ளி, துவக்கப்பள்ளி அல்லது நடுநிலைப்பள்ளி என, இரு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.
தொடர்ந்து, பள்ளிக்கல்வி துறை சார்பில், திருச்சி தேசிய கல்லுாரி மேல்நிலை பள்ளி வளாகத்தில், விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, விருதுக்கு தேர்வான பள்ளிகளுக்கு, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு கேடயம் மட்டுமே வழங்கப்பட்டது.
பரிசுத் தொகையான 10 லட்சம் ரூபாய் வழங்கவில்லை. மாறாக, அந்த தொகை பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்படும். அந்த துறை வாயிலாக பள்ளியில் மேம்பாட்டு பணிகளை செய்து கொள்ளலாம் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைவிரிப்பு அதை நம்பி, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் தொகை குறித்து கேள்வி எழுப்பவே, எங்களுக்கு எந்த தொகையும் வரவில்லை என, கைவிரித்துள்ளனர்.
இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
அன்பழகன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களுக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட மாட்டாது என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, உயர்நிலை அல்லது மேல்நிலைப் பள்ளி களில் தேர்வான பள்ளி களுக்கு மட்டுமே பரிசுத்தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த தொகையும் தலைமையாசிரியர்களிடம் வழங்காமல், பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. பணிகள் மேற்கொள்ள, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரினால், 2023 - 24ம் கல்வியாண்டிற்கான தொகையே வந்து சேரவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
விருதுக்கான தொகையை பெற்று பள்ளியில் வளர்ச்சிப் பணி மேற்கொள்வது கனவாக மாறிவிட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

