பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களில் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் ஏன்? அரசுக்கு கேள்வி
பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களில் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் ஏன்? அரசுக்கு கேள்வி
UPDATED : ஜன 13, 2025 12:00 AM
ADDED : ஜன 13, 2025 10:21 AM

மதுரை:
பிசியோதெரபிஸ்ட்கள் உட்பட அனைத்து பிரதான மருத்துவ துறை பணியிடங்களுக்கும் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமன அறிவிப்புகள் அதிகம் வர துவங்கிஉள்ளன.
தமிழக சுகாதாரத் துறையில் நிரந்தர பிசியோதெரபிஸ்ட் பணியிடங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என, இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள் சங்கத்தின் தமிழக கிளை தலைவர் கிருஷ்ணகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
சுகாதார துறை அமைச்சராக சுப்பிரமணியம் பொறுப்பேற்ற போது தொகுப்பூதிய அடிப்படையில் மருத்துவ துறையினர் நியமிக்கப்பட மாட்டார்கள் என உறுதி அளித்தார். ஆனால் உறுதி அளித்ததை நிறைவேற்றாமல் புதிய காலிப்பணியிடங்களை அறிவிக்கும் போதே தற்காலிக தொகுப்பூதிய பணியிடங்களாக அறிவிப்பது நீடிக்கிறது.
இதுபோன்ற அத்தியாவசிய துறைகளில் அதிக எண்ணிக்கையில் தற்காலிக பணியிடங்கள் உருவாக்கப்படுவது பொது சுகாதாரத்தின் தரத்தையும், பொதுமக்களின் நலனையும் பாதிக்கும்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 16ன் அடிப்படையில் சம வாய்ப்புகள் பிசியோதெரபிஸ்ட்களுக்கு, புறக்கணிக்கப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்ட புதியபிசியோதெரபிஸ்ட்கள் பணியிடங்களை, 'அவுட்சோர்சிங்' அடிப்படையில் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அவுட்சோர்சிங் மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பது, கொரோனா போன்ற அவசர கால தேவைகளை நிர்வகிக்க தேவையான ஒரு தற்காலிக வழிமுறை. ஆனால் இந்த வழிமுறையை அனைத்து காலங்களிலும், அனைத்து சூழல்களுக்கும் பொதுவானது எனக் கருதி பயன்படுத்த முற்படுவது சரியல்ல.
காவலாளி, துப்பரவு பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய துவங்கி இப்போது பிசியோதெரபிஸ்ட்கள் உட்பட அனைத்து பிரதான மருத்துவ துறை பணியிடங்களும் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் அறிவிப்புகள் அதிகம் வர துவங்கியுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.