மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்?: மனம் திறந்த தர்மேந்திர பிரதான்
மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்?: மனம் திறந்த தர்மேந்திர பிரதான்
UPDATED : ஆக 10, 2026 02:01 PM
ADDED : ஆக 10, 2026 02:03 PM

புவனேஸ்வர்:
“டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய இளைஞர்களை சிலர் தவறாக வழிநடத்த முயற்சித்ததாலேயே, மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன்,” என, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகி இரு வாரங்களுக்கு பின், பா.ஜ., லோக்சபா எம்.பி., தர்மேந்திர பிரதான், 57, முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சராக இருந்த பா.ஜ.,வைச் சேர்ந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஒரு மாதத்துக்கும் மேல் போராட்டம் நடத்தினர். இதில், ஆயிரக்கணக்கான மாணவர்களும் பங்கேற்றனர்.
தீவிர பேராட்டம்
போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, மத்திய கல்வி அமைச்சர் பதவியை, கடந்த 25ல், தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். தொடர்ந்து, போராட்டமும் கைவிடப்பட்டது.
இதையடுத்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு, கல்வி அமைச்சர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள ஜி.எம்., பல்கலையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, அம்மாநிலத்தின் சம்பல்பூர் லோக்சபா தொகுதி எம்.பி.,யான தர்மேந்திர பிரதான், மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து முதன்முறையாக மனம் திறந்தார்.
விழாவில், தர்மேந்திர பிரதான் பேசியதாவது:
இளம் தலைமுறையினர் நம் குழந்தைகள் போன்றவர்கள். டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய அவர்களை, சிலர் தவறாக வழிநடத்த முயன்றனர். இதன் காரணமாகவே மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன். இளம் தலைமுறையினருடன் எனக்கு எந்த தனிப்பட்ட பிரச்னைகளும் இல்லை.
நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு கோடி குழந்தைகள் பிறக்கின்றன. 10 ஆண்டுகளில், 20 கோடி குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களுக்கு லட்சியங்கள் உள்ளன. அவர்கள் நம் நாட்டை, 'விஸ்வ குரு'வாக மாற்றுவர். அமைச்சர் பதவி எனக்கு முக்கியமில்லை. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாக தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அஞ்ச மாட்டேன்
ராய்ரகால் பகுதியில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய தர்மேந்திர பிரதான், “ஒடிஷாவின் பல்வேறு இடங்களில், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் அறிவுறுத்தலின்படி, எனக்கு எதிராக போராட்டம் நடக்கிறது.
இதையெல்லாம் கண்டு அஞ்ச மாட்டேன். ஒடிஷா மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் எதையாவது நான் செய்திருக்கிறேனா?
நான் மாநிலத்திற்கு பெருமை சேர்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால், என் பணி ஒரு போதும் மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது இல்லை. மாநிலத்தின் பெயரை கெடுக்கும் எந்த ஒரு செயலையும் நான் செய்ய மாட்டேன்,” என்றார்.
