கூகுள் ஏ.ஐ., தரவு மையம் தமிழகத்திற்கு வராதது ஏன்? அமைச்சர் ராஜா விளக்கம்
கூகுள் ஏ.ஐ., தரவு மையம் தமிழகத்திற்கு வராதது ஏன்? அமைச்சர் ராஜா விளக்கம்
UPDATED : அக் 18, 2025 08:03 AM
ADDED : அக் 18, 2025 08:05 AM
சென்னை:
''அண்டை மாநிலத்திற்கு வந்த, கூகுள் ஏ.ஐ., தரவு மையத்தை குறை சொல்லி பேச விரும்பவில்லை. அதில் நிறைய அரசியல் உள்ளது,'' என, தொழில் துறை அமைச்சர் ராஜா கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - தங்கமணி: கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, தமிழகத்தை சேர்ந்தவர் இருக்கிறார். ஆனாலும், அந்நிறுவனத்தின் முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு வர முடியவில்லை.
அதுபோல, தமிழகத்தில் பாக்ஸ்கான் நிறுவனம், 15,000 கோடி ரூபாய் முதலீடு என்பதை அந்நிறுவனமே மறுத்துள்ளது. இதற்கு அரசின் விளக்கம் என்ன?
அமைச்சர் ராஜா: கூகுள் நிறுவனத்தை தமிழகம் கேட்கவில்லை என்பது தவறு. அதற்குள் என்ன அரசியல் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். கூகுள் நிறுவனம் சீனாவில் இல்லை.
அதனால், இந்தியாவில் முதலீடு செய்கிறது. அமெரிக்காவிலும், சீனாவிலும் இருக்கும் நிறுவனங்கள் தங்களது முடிவுகளை சொல்ல முடியவில்லை. இந்த உலக அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்.
பாக்ஸ்கான் நிறுவனத்தின், 15,000 கோடி ரூபாய் முதலீடு, தமிழகத்திற்கு வந்தே தீரும். கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், 14,000 பொறியியல் வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளோம்.
இந்த சபையில் இல்லாத ஒருவர், பாக்ஸ்கான் முதலீடு குறித்து தவறான தகவல்களை பேசி வருகிறார். அதனால், தமிழக இளைஞர்கள் பாதிக்கப்படுவர். எனவே, தமிழகத்திற்கு வரும் தொழில் முதலீடுகளை கொச்சைப்படுத்தி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.