பாரதியார் பல்கலையில் ஜூலையில் செனட் கூட்டம் நடத்தப்படுமா?
பாரதியார் பல்கலையில் ஜூலையில் செனட் கூட்டம் நடத்தப்படுமா?
UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM
ADDED : ஜூலை 04, 2024 03:43 PM
கோவை:
பாரதியார் பல்கலையில் ஜூன் மாதம் நடத்த வேண்டிய, செனட் கூட்டம் தொடர்பான அறிவிப்பு, இதுவரை வெளியாகாமல் உள்ளது. இது, உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலையின் நிர்வாக செயல்பாடுகளில், துணைவேந்தருக்கு இணையான அதிகாரமும், பொறுப்பும் சிண்டிகேட் மற்றும் செனட் ஆகிய இரு குழுக்களுக்கு உள்ளது. செனட் கூட்டத்தில் அனைத்துக் கல்லுாரிகளின் முதல்வர்கள், பிரதிநிதிகள் இடம்பெற்று இருப்பர்.
இக்குழுவினர் ஆண்டுக்கு இருமுறை கூடி, பல்கலையின் செயல்பாடுகளை ஆலோசனை செய்வது வழக்கம். பல்கலையின் நிதி சார்ந்த செயல்பாடுகளில், இந்த குழுக்களின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம்.
கடந்த டிச., மாதம் நடத்தப்பட வேண்டிய செனட் கூட்டம், ஜன., மாதம் நடத்த திட்டமிடப்பட்டது. இதில், தணிக்கை கணக்கு தாமதமாக சமர்ப்பிக்கப்பட்டதாக, பிரச்னை எழுந்ததைத் தொடர்ந்து, கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி, செனட் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், ஜூன் மாதம் கூட்டம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை நடத்தப்படாமல் உள்ளது. கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.