UPDATED : டிச 27, 2024 12:00 AM
ADDED : டிச 27, 2024 09:53 PM

தமிழகத்தில் அரசு பள்ளிகளில், இல்லாத பாடத்திட்டத்திற்காக மத்திய அரசு நிதி பெறப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அரசு பள்ளிகளில் ஆறு முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வுக்காக, ஹைடெக் லேப் வசதி, 2010 முதல் 6,454 பள்ளிகளில் துவங்கப்பட்டது. இதற்காக மத்திய அரசின் சமக்ர சிக் ஷா திட்டத்தில் நிதியாக ஒரு லேபுக்கு, 6.40 லட்சம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்பட்டது.
இவ்வகுப்புகளில் கணினி அறிவியலுக்கு என தனியாக பாடநுால் கழகம் மூலம் பாடத்திட்டம் தயாரித்து வழங்க வேண்டும். இப்பாடத்தை தியரி, செய்முறையாக கற்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும், ஆண்டுதோறும் இப்பாடத்திற்கான கணினி ஆசிரியர் சம்பளம், லேபிற்கான மின் கட்டணம், இணையதள சேவை கட்டணம் என 2.40 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் ஆறு முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் என தனியான பாடம் இல்லை. அதற்கு பதில், அறிவியல் பாடத்தில் மூன்று பக்கம் அளவில் ஐ.சி.டி., என்ற பெயரிலான பாடம் இணைக்கப்பட்டுள்ளது. ஹைடெக் லேப்களை ஆன்லைன் தேர்வு எழுத மட்டும் மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சமக்ரா சிக் ஷா திட்டத்தில் மத்திய அரசு வழங்கும் இந்த ஐ.சி.டி.,யின் பல கோடி ரூபாய் நிதியை, வேறு திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பி.எட்., கணினி ஆசிரியர்கள் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநில பொதுச்செயலர் குமரேசன் கூறியதாவது:
மாணவர்களுக்கு கணினி அறிவியலை கற்பிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஒரு ஆசிரியருக்கு ஆண்டு சம்பளமாக, 1.80 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக உயர்நிலையில் 6,454, நடுநிலையில் 8,209 என மொத்தம், 14,663 கணினி பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு செயல்படுத்தவில்லை.
கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கு பதில், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் 8,200 தன்னார்வலர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. இது, மத்திய அரசின் விதிகளுக்கு எதிரானது. இங்கு, தகுதியுள்ள பி.எட்., படித்த கணினி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.400 கோடி பாழ்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, 2021 முதல் 2024 வரை, கணினி பயிற்றுநர்களுக்கு சம்பளமாக வழங்க, மத்திய அரசு 400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் இல்லாததால், இதுவரை கணினி பயிற்றுநர்களும் நியமிக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது, என குமரேசன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் பாடம் கற்குமா?
அதேநேரம் கேரளாவில், 2016 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் மேல்நிலை வரை கணினி அறிவியல் பாடம் தனிப்பாடமாக வைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியல் பாடமும் உண்டு; அந்த அளவிற்கு கணினி அறிவியலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. கணினி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கும் 1.80 லட்சம் ரூபாயுடன் மாநில அரசும் இணைந்து சம்பளம் வழங்குகிறது.
இதுபோல் தெலுங்கானாவில் 61 பக்கங்களுடனும், கர்நாடகாவில் 139 பக்கங்களுடனும், டில்லியில் 146 பக்கங்களுடனும் கணினி அறிவியல் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் கேரளாவில்,மத்திய அரசின் திட்டங்களை மாணவர்களின் நலன் கருதி நடைமுறைப்படுத்துகின்றனர். இந்த விஷயத்தில், கேரளாவிடம் தமிழக கல்வித்துறை பாடம் கற்க வேண்டும் என, கல்வியாளர்கள் கூறுகின்றனர்.