சிறப்பு 'டெட்' தேர்வு பாடத்திட்டத்தை தெளிவுபடுத்துமா டி.ஆர்.பி.,
சிறப்பு 'டெட்' தேர்வு பாடத்திட்டத்தை தெளிவுபடுத்துமா டி.ஆர்.பி.,
UPDATED : அக் 25, 2025 10:08 AM
ADDED : அக் 25, 2025 10:09 AM
மதுரை:
அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு 'டெட்' தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பாடத்திட்ட விபரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் தெளிவுபடுத்த வேண்டும். தாள் 2 தேர்வில் முதன்மை பாட ஆசிரியர்களுக்கு அதுசார்ந்த வினாக்கள் அதிகம் இடம்பெறும் வகையில் அமைய வேண்டும் உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் ஆசிரியர்களிடையே எழுந்துள்ளன.
தேசிய அளவில் 2009 கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தொடக்க கல்வியில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு 'டெட்' தேர்ச்சி கட்டாயம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் 2011 ல் இத்தேர்வு நடைமுறைக்கு வந்தது. பதவி உயர்வுக்கும் 'டெட்' கட்டாயமா என்பது உட்பட சில வழக்குகள் தொடர்பான விசாரணையில், அனைத்து ஆசிரியர்களுக்கும் 'டெட்' தேர்ச்சி கட்டாயம் என்றும், ஓய்வு பெற 5 ஆண்டுகள் உள்ள ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு அளித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி தமிழகத்தில் 2011க்கு முன் பணியில் சேர்ந்த 1.70 லட்சம் ஆசிரியர்களும் 'டெட்' தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சீராய்வு மனுக்கள் தமிழக அரசு, ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், 2026 ஜன., 24, 25ல் சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அடுத்தடுத்த கட்டங்களாக ஜூலை, டிசம்பரிலும் இத்தேர்வு நடத்தப்படஉள்ளன.
இந்த வாய்ப்பை நழுவவிட்டால் ஆசிரியர் பணி கேள்விக்குறியாகிவிடும் என்பதால் பணியில் உள்ள ஆசிரியர்கள் தற்போது சிறப்பு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். ஆனால் அதற்கான பாடத்திட்டம் குறித்த தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
அனைவருக்கும் ஒரே 'கட்ஆப்' வேண்டும் இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க (எஸ்.எஸ்.டி.ஏ.,) மாநில தலைவர் ராபர்ட் கூறியதாவது:
தற்போது நடை முறையில் உள்ள ரெகுலர் 'டெட்' தேர்வில் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினா கேட்கப்படுகின்றன. ஆனால் சிறப்பு தேர்வு எழுதவுள்ளோர் 10, 20 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் உள்ளனர். அதற்கு ஏற்ப வினாத்தாள் தயாரிப்பு இருக்க வேண்டும்.
குறிப்பாக இரண்டாம் தாளில் தமிழ், ஆங்கிலம் பாட ஆசிரியர்களுக்கு அறிவியல், வரலாறு போன்ற பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் வினாக்கள் கேட்பதை தவிர்க்கலாம். அதுபோல் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு சமூக அறிவியல், வரலாறு போன்ற பகுதிகளில் அதிக மதிப்பெண்களுக்கான வினாக்கள் தேவையில்லை.
பணி அனுபவத்திற்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்க வேண்டும். தேர்ச்சி 'கட் ஆப்' இனச்சுழற்சி முறையில் இல்லாமல் அனைவருக்கும் ஒரே 'கட்ஆப்' ஆக இருத்தல் வேண்டும். இனசுழற்சி முறை என்பது பணி நியமனத்தின்போது தான் பின்பற்றப்படும். சிறப்பு தேர்வு, பணியில் உள்ளவர்களுக்கு நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்வுக்கான பாடத்திட்ட விபரத்தை விரைவில் வெளியிட வேண்டும் என்றார்.
நடவடிக்கை எடுக்கப்படும் கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தேர்வு நடத்துவது, வினாத்தாள் அமைப்பு உட்பட அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என நீதிமன்ற வழிகாட்டுதலில் உள்ளது. ரெகுலர் 'டெட்' தேர்வு போல் அல்லாமல், சிறப்பு தேர்வை 100 மதிப்பெண்ணுக்கு நடத்தும் திட்டமும் உள்ளது. அனைத்து ஆசிரியர்களையும் தேர்ச்சி பெற வைக்க தேவையான ஆலோசனை, பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

