வாழ்வில் வென்று சாதிப்பதே பெற்றோருக்கு கொடுக்கும் மரியாதை: நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்.,
வாழ்வில் வென்று சாதிப்பதே பெற்றோருக்கு கொடுக்கும் மரியாதை: நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்.,
UPDATED : ஏப் 29, 2024 12:00 AM
ADDED : ஏப் 29, 2024 12:05 PM
சிலைமான்:
வாழ்வில் வெற்றி பெற்று சாதிப்பது மட்டுமே நம்முடைய பெற்றோருக்கு நாம் கொடுக்கும் மரியாதை என, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்காக நடந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் வருமான வரித்துறை கமிஷனர் நந்தகுமார்பேசினார்.
மதுரை விரகனுார் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை, தினமலர் நாளிதழ் இணைந்து விரகனுார்காமராஜர் அரங்கத்தில் நடத்திய கற்க கசடற வழிகாட்டுதல் நிகழ்ச்சியை வேலம்மாள் கல்விக் குழுமம் தலைவர் முத்துராமலிங்கம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
பத்து ஆண்டுகளுக்கு பின் நீங்கள் என்னவாக வேண்டும் என்பதை இப்போதே முடிவு செய்யுங்கள். நல்ல மதிப்பெண் எடுத்தால் அரசுக் கல்லுாரியில் மற்றும் சலுகை கட்டணத்தில் தனியார் கல்லுாரிகளில் உயர்கல்வி படிக்கலாம். மதுரை வேலம்மாள் பள்ளியில் படித்த 160 மாணவர்கள் 90 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர். இதற்கு காரணம் அவர்களின் முழு முயற்சியே. கடின உழைப்பு வெற்றி தரும் என்றார்.
இதில் பங்கேற்ற வருமான வரி கமிஷனர் நந்தகுமார் பேசியதாவது:
இக்குறளில் உள்ள கசடற கற்க என்பது குறைவின்றி கற்க வேண்டும் என்பதே. அப்படி கற்ற பின் யாருக்கு முன்னே போய் நிற்க போகிறோம். நல்ல கல்லுாரியில் படித்தால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியாது. என்ன படிக்கப் போகிறோம் என்பதை இப்போதே தீர்மானிக்க வேண்டும். அதை நோக்கியே நாம் போய் கொண்டிருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு முடித்தவுடன் அரசு வேலைக்கு செல்லலாம். ஆனால் அந்த வேலைக்கு முதுநிலைக்கல்வி முடித்துவிட்டு வருகிறார்கள். நம்மை பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நாம் யாரைப்போல் ஆக வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்கான வழிகாட்டிகளை பின்பற்ற வேண்டும். அரசு பணியிலும், தனியார் துறைகளிலும், ஆராய்ச்சி, பொறியியல் போன்ற துறைகளிலும் சிறப்பான எதிர்காலம் உள்ளது. நமக்காக பாடுபட்ட பெற்றோருக்கு நாம் கொடுக்கும் மரியாதை, நாம் வாழ்வில் வெற்றி பெற்று சாதிப்பதே என்றார்.
ஆர்வம் ஐ.ஏ.எஸ்., அகாடமி நிறுவனர் சிபிகுமரன், மைகேரியர் பாயின்ட் புரொபஷனல் அகாடமி நிறுவனர் தாமோதரன் பகடாலா, கே.புதுார் அரசு ஐ.டி.ஐ., முதல்வர் ரமேஷ்குமார், வேலைவாய்ப்பு அலுவலர் வாசன் பாபு உள்பட பலர் பேசினர்.