UPDATED : ஜூலை 30, 2026 04:46 PM
ADDED : ஜூலை 30, 2026 05:17 PM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், உலக புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு புலிகள் பாதுகாப்பதன் அவசியம், காடுகளின் முக்கியத்துவம், இயற்கை பாதுகாப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
புலிகள் சுற்றுச்சூழல் சமநிலையை பேணுவதில் முக்கிய பங்கு வகிப்பதையும், காடுகள், மனித வாழ்வுக்கும், வனவிலங்குகளின் வாழ்வுக்கும் அடிப்படையாக இருப்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. பள்ளி முதல்வர் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் சார்பில், உலக புலிகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஆழியாறு அணை பூங்கா பகுதியில் துவங்கிய பேரணியை பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் அப்துல்லா துவக்கி வைத்தார். வனச்சரகர், தன்னார்வ அமைப்பினர், கல்லுாரி மாணவர்கள், புலியின் படங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு, 'வனத்தை காப்போம், புலிகள் காப்போம்' என கோஷமிட்டனர். ஆழியாறு அறிவுத்திருக்கோவில் வழியாக சென்று வனத்துறை சோதனைச் சாவடியில் பேரணி நிறைவு பெற்றது.
* டாப்சிலிப்பில் வனத்துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், புலிகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியருக்கு ஒவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வனச்சரகர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
* பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில், உலக புலிகள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது, ஏன் புலிகளை பாதுகாக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. தலைமையாசிரியர் பாலமுருகன் கூறுகையில், “புலிகள் தான் இயற்கையை சமநிலையாக வைக்க உதவும் உயிரினமாகும். புலிகள் காடுகளில் இருக்கும் போது மரங்கள் பாதுகாப்பாக இருக்கும். எனவே, புலிகள் இனத்தை பாதுகாக்க வேண்டும்,” என்றார். இறுதியில், 'சேவ் டைகர்' இன்னும் எழுத்து வடிவில் மாணவர்கள் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வால்பாறை வால்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, அட்டகட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, வால்பாறை வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணா, மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் ஆகியோர் தலைமை வகித்தனர். விழாவில், 'வனத்தை காப்பதில் புலிகளின் பங்கு' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “வனங்களின் முக்கியத்துவம், வனப்பாதுகாப்பின் அவசியம் குறித்தும், சுற்றுச்சூழல் சமநிலையை பேணுவதில் புலிகளின் பங்கு குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
புலிகளை காத்தால் தான் புவியை காக்க முடியும். காடுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க புலிகளை பாதுகாக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சிமலையில் புலிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,” என்றனர்.
