உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்; அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது சீனா
உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்; அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது சீனா
UPDATED : ஜூன் 25, 2026 09:34 PM
ADDED : ஜூன் 25, 2026 09:35 PM
உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கான பட்டியலில், அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனாவின் 'லைன்ஷைன்' முதலிடத்தை பிடித்துள்ளது.
சூப்பர் கம்ப்யூட்டர்கள் என்பது, சாதாரண கணினிகளை விட பல லட்சம் மடங்கு வேகமாக கணக்கீடுகளை மேற்கொள்ளும் அதிநவீன கணினி அமைப்புகள். வானிலை முன்னறிவிப்பு, விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி ஆய்வு, செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் உருவாக்கம், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு நாட்டின் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ராணுவ திறனை அளவிடும் முக்கிய குறியீடாகவும் சூப்பர் கம்ப்யூட்டர்கள் கருதப்படுகின்றன. உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களை தரவரிசைப்படுத்தும் பட்டியல் டாப் - 500 என்ற பெயரில் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படும். இந்த ஆண்டின் முதல் பட்டியல், ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் வெளியிடப்பட்டது.
சூப்பர் கம்ப்யூட்டர்களின் கணக்கீட்டு திறன் அடிப்படையில் இந்த தரவரிசை மதிப்பிடப்படுகிறது. அதில், சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மையத்தில் இயங்கும் 'லைன்ஷைன்' தற்போது உலகின் சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டராக உருவெடுத்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தில் இயங்கும் 'எல் காபிடன்' சூப்பர் கம்ப்யூட்டரே இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்தது. சீனாவின் 'லைன்ஷைன்' சூப்பர் கம்ப்யூட்டர் அமெரிக்க கம்ப்யூட்டரை விட 20 சதவீதம் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி அதை பின்னுக்கு தள்ளி உள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் 'சக்தி கிளவுட்' எனும் சூப்பர் கம்ப்யூட்டர் 32வது இடம் பிடித்துள்ளது.
