UPDATED : ஜன 11, 2026 09:34 PM
ADDED : ஜன 11, 2026 09:36 PM

சென்னை:
''எழுதுவது ஒரு பெரும் தவம். மூளையில் தோன்றுவதை, பேப்பரில் எழுத்தாக மாற்றுவதில் உள்ள கடினம், எழுத்தாளர்களுக்கு மட்டுமே தெரியும்,'' என, மணிமேகலை பிரசுர ஆசிரியர் குழு நிர்வாக தலைவர் லேனா தமிழ்வாணன் தெரிவித்தார்.
முனைவர் கு.நித்தியானந்தன் எழுதிய, 'மனமே உன்னிடம் சில நிமிடங்கள்' என்ற நுால் வெளியீட்டு விழா, சென்னை வேப்பேரியில் உள்ள மத்தியாஸ் சர்ச்சில் நேற்று நடந்தது.
நுாலின் முதல் பிரதியை வெளியிட்டு, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசியதாவது:
இதுவரை 105 நுால்களை எழுதியுள்ளேன். நுால்களை படிப்பதில் ஒரு கொள்கை வைத்துள்ளேன். என் நுால்களில் அணிந்துரை எழுதியதில்லை. ஏனெனில், நுால் ஆசிரியருக்கும், வாசகருக்கும் இடையில் மட்டுமே தொடர்பு இருக்க வேண்டும் என்பது என் கருத்து.
தற்போது வெளியிட்டுள்ள இந்நுாலை, தேர்வுக்கு தயாராகும் மாணவன் போல படித்தேன். எழுதுவது என்பது ஒரு பெரும் தவம். மூளையில் தோன்றுவதை, பேப்பரில் எழுத்தாக மாற்றுவதில் உள்ள கடினம், எழுத்தாளர்களுக்கு மட்டுமே தெரியும். அந்த வகையில், தான் கூற வந்ததை தெளிவாக, அர்த்தம் பிறழாது, இந்நுால் ஆசிரியர் தந்துள்ளார்.
இந்த, 'மனமே உன்னிடம் சில நிமிடங்கள்' நுாலில், ஆன்மிக கருத்துகள், மன நல மருத்துவர்கள் மட்டுமே கையாளக்கூடிய விஷயங்களை, மிக எளிமையாக ஆசிரியர் கையாண்டுள்ளார்.
மன நோயாளிகளுக்கு மன நல குறைபாட்டாளர் எனும் பெயரை தந்து உள்ளார். அவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து, அதிலிருந்து மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளார். இந்தியாவிற்கு நிகரான குடும்ப வாழ்க்கை முறை, வேறு எந்த நாட்டிலும் கிடையாது.
அதை வலியுறுத்தி, மனித குணங்கள், பெற்றோர் மற்றும் குழந்தைகள் உறவு, மாணவர் மற்றும் ஆசிரியர் உறவு உள்ளிட்ட பரந்த சிந்தனைகளை, சிறிய நுாலில் சிறப்புற அடக்கியுள்ளார். தமிழக அரசு, இந்நுாலை, 'மனநலம் மற்றும் மருத்துவம்' என்ற பிரிவில் நிச்சயம் அங்கீகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

