யோகா இயற்கை மருத்துவத்தில் சிறுநீரக செயலிழப்புக்கு தீர்வு
யோகா இயற்கை மருத்துவத்தில் சிறுநீரக செயலிழப்புக்கு தீர்வு
UPDATED : ஆக 08, 2025 12:00 AM
ADDED : ஆக 08, 2025 08:58 AM
சென்னை:
ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சையில், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு தீர்வு கிடைப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சென்னை அரும்பாக்கம் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள் ஒய்.தீபா, ஏ.விஜய், எல்.நிவேதிதா, என்.மணவாளன், எட்மின் கிறிஸ்டா, ஏ.மூவேந்தன் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வு கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
ரத்தத்தில் உள்ள நச்சுகளையும், உப்புகளையும் சுத்திகரித்து, கழிவை சிறுநீர் வழியே வெளியேற்றும் வேலையை, சிறுநீரகங்கள் செய்கின்றன.
இவற்றில் உள்ள, 'நெப்ரான்' எனப்படும், ரத்த நுண் சுத்திகரிப்பான்கள் பாதிக்கப்படும் போது, ரத்தத்திலேயே கழிவு கலந்து விடும். இப்பாதிப்பு இருப்பதை, நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என்கிறோம்.
ஆரோக்கியமான நபர்களுக்கு, ரத்தத்தில், 35 - 40 மில்லி கிராம் என்ற அளவுக்குள் தான் யூரியா இருக்க வேண்டும். கிரியாட்டினின் அளவு, 0.6 - 1.2 மில்லி கிராம் இருக்கலாம்.
இவை, 6 மி.கி., என்ற நிலைக்கு போகும் போது, சிறுநீரகம் செயலிழந்து விட்டதாக கருதப்பட்டு, டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும்.
இப்பாதிப்பை, யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் குணப்படுத்த முடியும் என்பதை, உறுதி செய்வதற்கான ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.
நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளான, 16 ஆண்கள், 10 பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதுகுறித்த அனைத்து விபரங்களும், அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
அதன்படி, 26 நோயாளிகளுக்கும், தினமும் இரு முறை, தலா ஒரு மணி நேரம் யோகா சிகிச்சை வழங்கப்பட்டது. அதில், பவனமுக்தாசனம், வஜ்ராசனம் உள்ளிட்ட 28 ஆசனங்களும், பிரணயாம சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.
இதைத் தவிர, தனித்தனியே, 15 நிமிடங்களுக்கு உடலின் இலகுத்தன்மையை உறுதி செய்வதற்கான யோகாசனங்கள் அளிக்கப்பட்டன.
காய்கறி சாறு, பழங்கள், வேக வைக்கப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டன. நீர் சிகிச்சை, மண் குளியல், மசாஜ் சிகிச்சை, சூரிய ஒளி சிகிச்சை, காந்த சிகிச்சை உட்பட, பல்வேறு வகையான சிகிச்சைகள், ஒரு மாதம் வழங்கப்பட்டன.
அதன்பயனாக, ரத்தத்தில் சர்க்கரை அளவு, கிரியாட்டினின் அளவு குறைந்தது. மற்றொருபுறம் ரத்த அணுக்கள் விகிதம் அதிகரித்தது. இது போன்று பலருக்கு சிகிச்சை அளிக்கும் போது, நுட்பமான முடிவை அறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.