UPDATED : மார் 07, 2025 12:00 AM
ADDED : மார் 07, 2025 09:19 AM
பந்தலுார்:
பந்தலுார் அருகே, தேவாலா பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளிக்கு, ஒரு கோடி ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் சமுத்திர பாண்டியன் வரவேற்றார்.
கட்டடங்களை, நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா திறந்து வைத்து பேசுகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகள் மற்றும் புதிய கல்வி திட்டங்கள், உயர்கல்வி பயில உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மாநில அரசால் செயல்படுத்தப்படுகிறது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சாதனையாளர்களாக மாறிவரும் நிலையில், பழங்குடி மாணவர்கள் சிறப்பான முறையில் படித்து நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், ஆர்.டி.ஓ. செந்தில்குமார், தாசில்தார் முத்துமாரி, நெல்லியாளம் நகர் மன்ற தலைவர் சிவகாமி, மாவட்ட பொறுப்பாளர் ராஜூ, மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர் மோனீஸ் நன்றி கூறினார்.