புத்தகம் படிக்கலாம் பின்பு... புத்தாக்கப்பயிற்சி தரலாம் முன்பு
புத்தகம் படிக்கலாம் பின்பு... புத்தாக்கப்பயிற்சி தரலாம் முன்பு
UPDATED : மே 29, 2025 12:00 AM
ADDED : மே 29, 2025 10:50 AM
திருப்பூர்:
பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவ, மாணவியருக்கு புத்தாக்கப்பயிற்சி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து, சில தினங்களில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. புதிய வகுப்பு, புதிய பாட புத்தகங்கள், புதிய ஆசிரியர்கள், புதிய சீருடை என, எல்லாம் புதிது என்ற உற்சாகத்தில் பள்ளிக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.
கல்வியாண்டின் துவக்க நாளில் இருந்தே, ஏட்டுக்கல்வியை போதிப்பை காட்டிலும், குறைந்தது, இரு வாரங்களாவது, வாழ்க்கைக்கல்விக்கான புத்தாக்கப் பயிற்சியை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.அதற்கு காரணம், மொபைல்போன்களின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் மாணவர்கள், தங்கள் இயல்பை தொலைத்திருக்கின்றனர் என்பதுதான்.
பெரும்பாலான மாணவர்கள், பள்ளி பருவத்திலேயே போதை பழக்கத்துக்கு அடிமையாகி, உடல், உள்ளம் பாதிக்கப்பட்டு, மனதளவில் சிதைந்து போயுள்ளனர்.இதனடிப்படையில் தான், கேரளாவில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் போது, முதல் இரு வாரங்களுக்கு, மாணவர்கள் புத்தகங்களை கொண்டு செல்ல தேவையில்லை; அவர்களுக்கு சமூக பிரச்னைகள் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்படும் என்று, அண்டை மாநிலமான கேரளா அறிவித்துள்ளது.
நல்லொழுக்கமே முக்கியம்
பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே பாட, நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்குவது, வகுப்பறை மீது அவர்களுக்கு ஆர்வம் வர வேண்டும்; கல்வியின் மீது நாட்டம் வர வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால், முதலிரு வாரங்கள், மாணவ, மாணவியருக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்குவதை தான் பலரும் பின்பற்றுகின்றனர். கொரோனாவுக்கு பின், மாணவர்களின் வாழ்க்கை சூழல் தலைகீழாக மாறிப் போயிருக்கிறது.
எனவே, மாணவ, மாணவியருக்கு நல்ல ஒழுக்கம் கற்றுத்தர வேண்டும்; அவர்களின் நடத்தையை சரியானதாக்க வேண்டும். இவையிரண்டும் வந்துவிட்டால், அவர்களின் உடல், உள்ளம் தெளிவு பெற்று, கல்வியில் சிறந்து விளங்க துவங்கிவிடுவர். தேர்ச்சி மட்டும் வாழ்க்கையல்ல என்பதை உணர்ந்துக் கொள்வர்.- சுந்தரமூர்த்தி, மாநில தலைவர், தமிழ்நாடு விடியல் ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
இயற்கை அறிவு அவசியம்
சுமார் இரு வாரங்கள், வகுப்பறை சூழலில் இருந்து விடுபட்டு, வெளியுலக சூழலுக்கு குழந்தைகள் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டனர். எனவே, பள்ளிகள் திறந்து முதலிரு வாரங்கள், மாணவ, மாணவியருக்கு சமூக விழிப்புணர்வு சார்ந்த விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். பாடல், பொம்மலாட்டம் உள்ளிட்டவற்றின் வாயிலாக, வகுப்பறை சூழலை மகிழ்ச்சியானதாக மாற்ற வேண்டும். சுற்றுச்சூழல், இயற்கை, காலநிலை மாற்றம், நீரின் முக்கியத்துவம், அதன் மறுசுழற்சி, நீர் சிக்கனம், மழைநீர் சேகரிப்பு, மழை மற்றும் கோடை காலங்கள் தொடர்பான விஷயங்களை கற்றுத்தரலாம். தற்போதைய சூழலில் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதை தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும், தினசரி சில நிமிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம் கூறியுள்ளார்.