அரசு கல்லுாரிகளில் சேர மே 27க்குள் பதிவு செய்யலாம்
அரசு கல்லுாரிகளில் சேர மே 27க்குள் பதிவு செய்யலாம்
UPDATED : மே 15, 2025 12:00 AM
ADDED : மே 15, 2025 07:51 AM
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் கல்லுாரி மாணவ- - மாணவியர்க்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் வாயிலாக 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
நான் முதல்வன் திட்டம் வாயிலாக வேலைவாய்ப்பிற்கான பயிற்சிகள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மற்றும் இலவச பேருந்து வசதிகளும் உள்ளன.
திறமை வாய்ந்த ஆசிரியர்களை கொண்டும், கட்டமைப்பு வசதிகளுடன், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் மற்றும் குன்றத்துாரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் சிறப்பாக செயல்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் 2025- 26ம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 27ம் தேதி வரை பதிவு செய்யலாம்.
தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.