கடைசி நேர பதட்டம் தவிர்க்க திட்டமிட்டு படிக்க வேண்டும்
கடைசி நேர பதட்டம் தவிர்க்க திட்டமிட்டு படிக்க வேண்டும்
UPDATED : ஏப் 22, 2025 12:00 AM
ADDED : ஏப் 22, 2025 09:08 AM

கோவை :
மே முதல் வாரம் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் நடைபெறவுள்ள சூழலில், இறுதி நேரத்தில் பதட்டத்தை தவிர்த்து, திட்டமிட்டு படிக்க வேண்டியது அவசியம்.
தேசிய அளவில், அரசு, தனியார் மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவம் படிப்புகளுக்கும், கால்நடை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் நுழைவுத்தேர்வு வாயிலாக, சேர்க்கை நடக்கிறது. இத்தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது.
நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு, மே முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. குறைவான நாட்களே உள்ள நிலையில், சரியான பயிற்சிகளை, திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார் கல்வியாளர் அஸ்வின்.
அவர் கூறியதாவது:
பதட்டம், அச்சம் கொள்வதற்கான நேரம் இதுவல்ல. படித்ததைதான் கேட்கப்போகிறார்கள். தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இதில், பயாலஜி பிரிவுகளில் 360 கேள்விகளும், இயற்பியலில் 180 கேள்விகளும், வேதியியலில் 180 கேள்விகளும் இருக்கும்.
திட்டமிட்டு படிங்க
பொதுவாக, பயாலஜி, வேதியியல் பிரிவுகளை மாணவர்கள் எளிதாக எதிர்கொண்டு விடுவார்கள். மதிப்பெண்களை குறைக்கும் நோக்கிலேயே, இயற்பியல் கேள்விகள் ஒவ்வொரு முறையும் கடினமாக கேட்கப்படுகிறது.
சிந்தித்து பதில் அளிக்கும் வகையில் கேள்விகள் இருக்கும். தற்போது இறுதி நேரம் என்பதால், திட்டமிட்டு படிக்க வேண்டும்.
கடைசி, 10 ஆண்டு கேள்வித்தாள்களை எடுத்து, பல முறை மாதிரி தேர்வுகளை எழுதிபாருங்கள். எந்த பிரிவில் தடுமாறுகின்றோமோ, அதில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். குறிப்பாக, இயற்பியல் கணக்குகளை போட்டு பார்க்க வேண்டும்.
இயற்பியலில் கவனம்
இயற்பியல் பிரிவில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எலக்ட்ரிசிட்டி, கிரேவிட்டேஷன், எலக்ட்ரோ ஸ்டேடிக்ஸ், ரே ஆப்டிக்ஸ், செமி கண்டக்டர், டெர்மோ டைனமிக் போன்ற முக்கிய பகுதிகளில், கூடுதலாக நேரம் செலவிட்டு படிக்கவேண்டும். மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க வேண்டும்.
நேர மேலாண்மை முக்கியம்
நன்றாக படித்துவிட்டு பல மாணவர்கள், நேர மேலாண்மையில் தவறு செய்துவிடுவார்கள். முதலில் பயாலஜி, வேதியியல் பிரிவுக்கான கேள்விகளை எதிர்கொள்வதே சிறந்தது. முதலில் இயற்பியல் எழுத துவங்கினால் அதிக நேரம் செலவாகிவிடும். தெரியாத கேள்விகளை வைத்து நேரத்தை கடத்தாமல், தெரிந்தவற்றை முடித்த பின்னர் தெரியாதவற்றை எழுதவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.