UPDATED : ஆக 14, 2024 12:00 AM
ADDED : ஆக 14, 2024 08:38 AM

கோவை:
நீர் மேலாண்மையை சரியாக கையாள விட்டால், எதிர்காலத்தில் மின்சாரத்தை விட, நீருக்கு தான் அதிக செலவிட வேண்டியிருக்கும், என குவைத் அறிவியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
கோவை அரசு கலைக் கல்லுாரியில், புவி அமைப்பியல் துறை சார்பில், நீர் மேலாண்மை குறித்து மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர் எழிலி தலைமை வகித்தார். அரசியல் அறிவியல் துறை தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். துறை பேராசிரியர் கவுதம் வரவேற்றார்.
குவைத் அறிவியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி சிதம்பரம் பேசியதாவது:
நீர் மேலாண்மையில் கவனம் செலுத்துவது மிக முக்கியம். ஒவ்வொரு பகுதியிலும், எவ்வளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது என்ற தரவுகள், நம்மிடம் இல்லை.
மழை காலத்தின் போது, நீரை சேமிக்கும் வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். தற்போது, காலநிலை மாறி விட்ட சூழலில், மூன்று மாதங்களுக்கு பெய்ய வேண்டிய மழை, ஓரிரு நாட்களில் பெய்து விடுகிறது.
இதற்கு ஏற்றார் போல், விவசாயம் மேற்கொள்ளும் பருவத்தை மாற்றி, ஏரி, குளம், குட்டை போன்ற நீராதாரங்களை துார் வாரி, நீரை சேமிக்க தயார் நிலையில் வைக்க வேண்டும். வருங்கால தேவைக்காவது, இந்த கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.
வீடு, தொழிற்சாலைகளிலும் வீணாகும் நீரை, சுத்திகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வழி ஏற்படுத்தி, சுத்திகரிப்பு மேற்கொள்ளும் போது, வெளியாகும் திடப்பொருட்களை, இயற்கை உரமாக மாற்றலாம்.
நீர் மேலாண்மையில், சிங்கப்பூர், நெதர்லாந்து ஆகிய நாடுகள், சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. நீர் மேலாண்மையில் கவனம் செலுத்தாமல் விட்டால், வருங்காலத்தில், மின்சாரத்தை விட நீருக்கு அதிகமாக செலவிட வேண்டியிருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
புவி அமைப்பியல் துறை பேராசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.
ஜெர்மனி அபாரம்
பருவ காலங்களில் எவ்வளவு மழை பெய்யக் கூடும், கிடைக்கும் நீரை எப்படி சேகரிக்க வேண்டும், தற்போதைய மக்கள் தொகை, வருங் காலங்களில் உயரக்கூடிய மக்கள் தொகையை கணக்கிட்டு, கடந்த 1950ம் ஆண்டு முதல் நீர் மேலாண்மை குறித்த தரவுகளை ஜெர்மனி கையாண்டு வருகிறது என, விஞ்ஞானி சிதம்பரம் தெரிவித்தார்.
ஸ்மார்ட் அக்ரிகல்ச்சர்
செடியின் ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ப, தேவைப்படும் நீரை பயன்படுத்தலாம். இதற்கென, கம்ப்யூட்டர் வாயிலாக சிப் பொருத்தி, இவ்வளவு தண்ணீர் தான் தேவைப்படும் என்ற மேலாண்மை வரத்துவங்கி விட்டது. இதை, ஸ்மார்ட் அக்ரிகல்ச்சர் என்பார்கள். தைவான் நாட்டில் ஸ்மார்ட் அக்ரிகல்ச்சர் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் இப்போது தான் பிரபலமாகி வருகிறது.